Published : 24 Aug 2020 01:39 PM
Last Updated : 24 Aug 2020 01:39 PM

புதிய கல்விக் கொள்கை; மத்திய அரசு நேரடியாக துறைச் செயலருக்கு கடிதம் எழுதுவது கூட்டாட்சி அமைப்பை மீறும் செயல்: முதல்வருக்கு கல்வியாளர் அமைப்பு கடிதம்

சென்னை

மத்திய கல்வி அமைச்சகச் செயலர், மாநில பள்ளிக் கல்வித்துறைச் செயலர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஆலோசனை கேட்கச் சொல்வது மாநில சுயாட்சியை மீறும் செயல் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:

“இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதன் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் / ஒன்றிய பிரதேசங்களின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு ஆகஸ்டு 21 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப் படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்ற கருத்துரைகள் ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்களிடம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆழ்ந்த விவாதத்தை, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் / முதல்வர்கள் நடத்தி, தங்கள் கருத்தை மத்திய அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்திடும் வகையில் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லுமாறும், அத்தகைய நடவடிக்கைகளை மாநில பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகள் வாயிலாகச் செய்திடுமாறும் மாநில / யூனியன் பிரதேச அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், மாநில சட்டப்பேரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை.

மாநில அரசுகள் இன்னும் இதுகுறித்தான தங்கள் கருத்தைத் தெரிவிக்கவில்லை. மக்களாட்சி மாண்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசானது, முதல்வர் தலைமையில் மாநில நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது. மாநில அரசின் அமைச்சரவை, தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து விவாதித்து, எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து, மாநில அரசு, தன் நிலையைத் தெரிவிப்பதற்கு முன்பாகவே, மாநில முதல்வரின் தலைமையில் உள்ள அமைச்சரைவைக்குத் தெரிவிக்காமல், கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான கருத்துரைகளை மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பெறுவது குறித்து, மத்திய அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், நேரடியாக மாநிலப் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில், ஆசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப் படுத்துவதற்கான கருத்துரைகளை மாநிலப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் வழக்கமான நிர்வாகச் செயல்பாடன்று. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டிய அரசின் கொள்கை நிலைப்பாடு சார்ந்ததாகும்.

மாநில அரசிற்கு அத்தகைய அதிகாரம் உள்ளதைக் கவனத்தில் கொள்ளாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நடந்து கொள்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட, இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக உள்ள மத்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர், நேரடியாக, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எவ்வாறு, என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுக் கடிதம் எழுதியுள்ளமை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

மத்திய, மாநில அரசுகளின் அதிகார எல்லைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-யின் பல்வேறு கூறுகள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தினால்தான் நடைமுறைப்படுத்த இயலும்.

அதன் விளைவாக, மாநில அரசும், மாநிலச் சட்டப்பேரவையும் தங்கள் அதிகாரங்களை இழக்கக் கூடும். இத்தகைய தொலைதூரத் தாக்கங்களைக் கொண்ட கொள்கையினை, நேரடியாக அரசு அலுவலர்கள் வாயிலாக நடைமுறைப்படுத்த முயல்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் செயலாகும்.

21.8.2020 நாளிட்ட தனது கடிதத்தை மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளித்துத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு, முதல்வர் இக்கடிதம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து மாநில அரசு உரிய கருத்துரைகளை வெளிப்படுத்தித் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இக்கொள்கையின் தாக்கங்கள் குறித்து முழுமையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத் ராஜ் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம், மாநில அரசுகளை புறம்தள்ளி, மத்திய அரசு நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி அளித்திட வழி செய்தது.

அத்தகைய நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்ற வலுவான குரலை மாநில அரசுகள் எழுப்பின. அதன் விளைவாக, சட்டம் திருத்தப்பட்டது. மத்திய அரசின் நிதி, மாநில அரசின் வழியாக உள்ளாட்சிகளுக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டது.

மாநில‌ அரசின் உரிமையைக் காக்கின்ற அத்தகைய உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு இப்போதும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது”.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x