Published : 24 Aug 2020 12:26 PM
Last Updated : 24 Aug 2020 12:26 PM
நிதி நிலையைக் காரணம் காட்டி, கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்றுவரும் தடுப்பணை மற்றும் கதவணை கட்டும் பணிகளை நிறுத்தக்கூடாது என திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கிள்ளை ரவிந்திரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை நிறுத்திவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தடுப்பணைப் பணிகளும், 585 கோடி ரூபாய் மதிப்பில் 77 இடங்களில் கதவணைகள் அமைக்கும் பணிகளும் அடக்கம்.
மதுராந்தகம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, மாதவரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் புனரமைப்புப் பணிகளுக்காக 302 கோடி ரூபாய், 40 இடங்களில் பாசனக் கட்டுமானங்களைப் பழுதுபார்க்க 834 கோடி ரூபாய் உட்படப் பல்வேறு திட்டங்களுக்காக மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது.
தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாகத் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், எந்தக் காரணம் கொண்டும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை மற்றும் கதவணைப் பணிகளை நிறுத்தக்கூடாது என்று திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கிள்ளை ரவிந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''மேட்டூரில் திறந்துவிடப்படும் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்த் தேவையைத் தீர்க்கவும், கொள்ளிடக் கரையோர மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கவும் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் வேண்டுகோளாக இருந்தது.
டெல்டா பகுதி மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதற்குப் பிறகு தற்போதைய முதல்வர் கதவணைகள், தடுப்பணைகள் உட்பட பல்வேறு திட்டங்களைச் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனைத் தமிழக மக்களும் வரவேற்றுப் பாராட்டினார்கள்.
ஆனால், தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இத்திட்டங்களை அதிமுக அரசு கைவிடப் பார்க்கிறது. இந்தத் திட்டங்களை வெறும் செலவினத் திட்டங்களாக மட்டும் பார்க்கக்கூடாது. இது பல்வேறு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் திட்டம். கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம். பல ஆயிரம் ஏக்கரில் விவசாயத்தைப் பாதுகாக்கக் கூடிய திட்டம்.
எனவே, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டியோ, மற்ற எந்தச் சூழலைக் காரணம் காட்டியோ இத்திட்டப் பணிகளை நிறுத்தக்கூடாது. இதற்கான நிதிகளைத் தொய்வின்றி ஒதுக்கி வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு கிள்ளை ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT