Published : 24 Aug 2020 11:37 AM
Last Updated : 24 Aug 2020 11:37 AM
நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலை இல்லாத உடலுக்குச் சமம் என, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபின், காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஸ்வானி குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆனால், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அந்தக் கடிதம் குறித்து இன்று (ஆக.24) நடக்கும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமை குறித்து விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலை இல்லாத உடலுக்குச் சமமாகும்.
மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு நமது நாட்டுக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இன்றும் அடிப்படையாக இருப்பது நேரு குடும்பத்தின் அர்ப்பணிப்பாகும்,
நேரு குடும்பத்தின் தலைமையைப் பற்றி, கேள்வி எழுப்பும் சிலர், முதலில் அவர்களுடைய தகுதியை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ராகுல் காந்தி செயல் தலைவராகவும், தொடர்ந்து செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாகும்.
தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நேரு குடும்பத்தின் தன்னலமற்ற சேவையே நமது மாபெரும் நாட்டையும் கட்சியையும் வழிநடத்த முடியும்".
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT