Published : 24 Aug 2020 09:23 AM
Last Updated : 24 Aug 2020 09:23 AM
கரோனா அச்சுறுத்தல், தொடர் ஊரடங்கு காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 60 சதவீதம் குறைந்துள்ளது.
சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தயாரிக்கும் தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் நேரடி யாகவும், உப தொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளைச் சந் தித்து வருகிறது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்குத் தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை இல்லை என்றும், ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் பேரியத்துக் கும், சரவெடி தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பு பெரும் பாதிப்பைச் சந்தித்து வந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டும் பட்டாசு தயாரிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங் கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காலத்தில் பட்டாசு ஆலைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன. 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டே பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் பட்டாசு தயாரிக்கும் தொழில் இந்த ஆண்டு கரோனா காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருமணம், கோயில் திரு விழாக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள் ளதால் பட்டாசு வாங்க ஆர்டர்கள் இல்லை. தசராவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதால் வட மாநிலங்களில் இருந்தும் ஆர் டர்கள் இல்லை. இதனால் பட்டாசு ஆலையைத் தொடர்ந்து நடத்தவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள் ளப்பட்டுள்ளோம்.
இந்த ஆண்டு தீபாவளியும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக் குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே பட்டாசு தயாரிக்கப்படுகிறது. கையிருப்பை செலவு செய்தும், கடன் வாங்கியும் தொழில் நடத்தி வருகிறோம். போதிய ஆர்டர்கள் இல்லாததால் இந்த ஆண்டு சுமார் 60 சதவீதம் பட்டாசு தயாரிப்பு குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT