Published : 23 Aug 2020 08:22 PM
Last Updated : 23 Aug 2020 08:22 PM
சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் 464 ஆண்டு பழமையான 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடியைச் சேர்ந்த புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் குறிப்பிட்டுள்ளதாவது:
சக்கந்தியில் அரண்மனை சசிவர்ணம் அவரது தம்பி மலைராஜ் மற்று ராமநாதபுரம் மாரி ஆகியோர் சாய்ந்து மண் மூடிக்கிடந்த கல் ஒன்றில் எழுத்து இருப்பதைக் கண்டு அதை நட்டுவைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு கள ஆய்வு செய்தபோது 464 ஆண்டு பழமையான 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது.
சக்கந்தியில் பிற்காலப் பாண்டியர்களின் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து போயிருக்கலாம். அதற்கான எச்சங்கள் காணக்கிடைக்கின்றன.
சக்கந்தி கண்மாய்க்கரையில் நந்தி சிலையொன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது.
மேலும், சக்கந்தி ஊரினுள் அரண்மனை என்று அழைக்கபடுகிற இடத்தின் எதிரே உள்ள பொட்டலில் கோயில் இடிபாட்டில் மிச்சப்பட்ட முப்படைக் குமுதகத் துண்டுக் கல்வெட்டு வரிகளில் செழியத்தரைய மற்றும் இன்னாயினாருக்கு என வருகிறது.
இதில் செழியத்தரைய என்பது பாண்டியர் கால அரசு அலுவலரைக் குறிப்பதாகவும் இன்னாயினாருக்கு என்பது கடவுள் பெயரைக் குறிப்பதாகவும்.
இக்கல்வெட்டு இறையிலி தானம் வழங்கிய செய்தியைச் சொல்வதாகக் கொள்ளலாம். எழுத்தமைதி பதிமூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்ததாக செவிவழிச் செய்திகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவகங்கைப் பகுதியில் நாயக்கர் கால கல்வெட்டு கிடைத்திருப்பது மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT