Last Updated : 23 Aug, 2020 06:22 PM

1  

Published : 23 Aug 2020 06:22 PM
Last Updated : 23 Aug 2020 06:22 PM

நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க ரூ.1.42 கோடி ஒதுக்கீடு: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்குவதற்காக அரசு ரூ.1 கோடியே 42 லட்சத்து 55 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் கடந்த 5 மாதமாக அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை விவரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சைக்கும், நோயாளிகளுக்கு உணவு வழங்கவும் ஒதுக்கப்பட்ட தொகை விவரங்கள் குறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுதகவல் அலுவலர் அளித்துள்ள பதில்கள்:

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2020-2021-ல் அறுவை சிகிச்சைக்கு ரூ.2 கோடி, மருந்துகளுக்கு ரூ.5.60 லட்சம், உணவு வகைக்கு ரூ.1.42 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மருத்துவ அலுவலர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.26.25 லட்சம், ஆய்வகத்துக்காக பொருட்கள் வாங்கியதற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் இதர உபகரணங்கள் ரூ.14.70 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது.

கரோனா வார்டில் 124 டாக்டர்களும், 236 முதுநிலை மருத்துவ மாணவர்கள், 699 செவிலியர்கள், 447 இதர பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த மார்ச் முதல் ஜூலை வரை கரோனா தடுப்பு கவச உடைகள் ரூ.52,132-க்கும், என் 95 முககவசங்கள் ரூ.76,300-க்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு அம்சம் கொண்ட முககவசங்கள் ரூ.3.77 லட்சத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்க ரூ.1,42, 55,000-ம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

உணவு விவரம்:

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள் விவரம்:

அதிகாலை- குழந்தைகளுக்கு பால். நோயாளிகளுக்கு காலை உணவு- இட்லி, சாம்பார், பொங்கல், உப்புமா, தோசை, சாம்பார், ரவா கிச்சடி (சுழற்சி முறையில்).

முன்காலை- மஞ்சள் கலந்த பால், வாழைப்பழம், அவித்த முட்டை, மிளகு பால், ஆரஞ்சுப்பழம், மிகவும் பலவீனமான நோயாளிகளுக்கு வாழைப்பழம், ரொட்டி. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி பானம்.

மதிய உணவு- தயிர் சாதம், ஊறுகாய் தினமும், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம், எலுமிச்சை சாதம், பீட்ரூட் பொரியல், சௌசௌ பருப்பு கூட்டு, வெங்காய சம்பல், கேரட்,பீன்ஸ், முட்டைக்கோஸ் பொரியல், சுரைக்காய் கூட்டு, தடியங்காய், சுரைக்காய் கூட்டு (சுழற்சி முறையில்), மிகவும் பலவீனமான நோயாளிகளுக்கு அரிசி கஞ்சி. மாலை சிற்றுண்டி- இஞ்சி டீ, அவித்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, அவித்த வேர்க்கடலை, பொரிகடலை உருண்டை.

இரவு உணவு- சப்பாத்தி, வெஜிடபிள் குருமா, இட்லி, சாம்பார், உப்புமா, தேங்காய் சட்னி, தோசை, சாம்பார் (சுழற்சி முறையில்). பால்- பனங்கற்கண்டு, மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்த பால், குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x