Published : 23 Aug 2020 06:10 PM
Last Updated : 23 Aug 2020 06:10 PM
இந்தி தெரியாத தமிழக இயற்கை மருத்துவர்களை பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் எனக்கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், 'பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது சரியல்ல. இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அதனை புரிந்து கொள்ள இயலாது' என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டவுடன், ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கோடேச்சா என்ற அதிகாரி கொந்தளித்து, 'இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வகுப்பில் இருந்து வெளியேறலாம்' எனக் கட்டளையிட்டுள்ளார். 'யாரெல்லாம் அப்படிச் சொன்னவர்கள் என்ற பட்டியலை கொடுங்கள், அவர்கள் மீது தலைமைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக' மிரட்டியுள்ளார்.
இந்தி மொழியை தீவிரமாக திணிப்பதற்காகவே, ராஜேஷ் கோடேச்சா போன்றவர்களுக்கு, ஓய்வு வயது தாண்டியும் மத்திய அரசு பணி நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
ஆயுஷ் துறையின் செயலாளரின் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும், தமிழ் மொழியை அவமதிக்கும் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இது போன்றவர்களின் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை மத்திய அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளிலும், மத்திய அரசு நடத்தும் கூட்டங்களிலும் தமிழக அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT