Published : 23 Aug 2020 05:56 PM
Last Updated : 23 Aug 2020 05:56 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்வு 3 நாட்களுக்கு மேல் நடைபெறும்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் விநாயகர் சிலையை வீடுகளிலே பூஜைக்கு வைத்து வழிபாடு செய்யவும், இடையூறின்றி பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் அமைதியான முறையில் கரைக்கவும் அரசு அனுமதி அளித்ததுடன், பொது இடங்களில் சிலைகளை வைக்க தடை விதிக்கப்பட்டது.
இதை பின்பற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா, பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முன்தினம் கோயில்கள், வீடுகளில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைக்கு வைக்கப்பட்டன.
நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், தக்கலை, திங்கள்நகர், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதம் பரவலாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரசு விதிமுறைகளின் படி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் விநாயகர் சிதுர்த்தி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்றன.
குமரி மாவட்டத்தில் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நேற்று காலையில் இருந்து தொடங்கியது.
இந்துமகா சபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் பக்கத்தில் உள்ள ஆறு, குளங்கள், மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நாகர்கோவில் பழையாறு, தோவாளை, செண்பகராமன்புதூர் கால்வாய், மற்றும் பிற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே சிலைகள் கரைப்பில் பங்கேற்றனர்.
இதைப்போல் இந்து முன்னணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை மறுநாள் (25ம் தேதி) நீர்நிலைகளில் சமூக இடைவெளியுடன் கரைக்கப்பட இருப்பதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தெரிவித்தார்.
மேலும் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அரை அடிக்குள் உயரமுள்ள சிறிய பிள்ளையார் சிலைகளையும் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT