Published : 23 Aug 2020 05:01 PM
Last Updated : 23 Aug 2020 05:01 PM

கரோனா சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விலைமதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்குக; முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விலைமதிப்பு குறித்து பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதல்வரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய உத்தப்பம் ஒன்று என வழங்கப்படுவதாக தெரிகிறது.

வேறு சில பகுதிகளில் முட்டையும், பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.
இவை அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் முதல்வரின் கணக்கு, பொருந்தாக் கணக்காகவே வருகிறது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும் நடைபெறுவதாக புகார்களும் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் கரோனா நோய் சிகிச்சை பெறுவோருக்கு, வழங்கப்படும் உணவு விபரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்வரை கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x