Published : 23 Aug 2020 04:42 PM
Last Updated : 23 Aug 2020 04:42 PM
திருச்சி மாவட்டத்தில் தளர்வற்ற ஒரு நாள் ஊரடங்கு இன்று அமலில் இருந்த நிலையில், வாகன இயக்கம் இன்றி சாலைகள் ஒருபுறம் வெறிச்சோடி காணப்பட்டாலும், மறுபுறம் ஊரடங்கைக் கடைபிடிக்காமல் பல இடங்களிலும் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றினர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன்படி, திருச்சி உள்ளிட்ட கரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையிலான ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆக.2, 9, 16, 23, 30 ஆகிய 5 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
கடந்த மாதமும், நிகழ் மாதம் முந்தைய முழு ஊரடங்கு நாட்களிலும் மாநகரச் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி, வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால், இன்றைய முழு ஊரடங்கு நாளில் மாநகரின் பல்வேறு சாலைகளிலும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டன. அதேபோல், பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களை காவல்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்து, முறையான பதில் அளிக்காதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பெ.அய்யாரப்பன் என்பவர் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் தற்போது வாரத்தில் ஒரு நாள் மட்டும் எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஊரடங்கு நாட்களில் காவல்துறை கெடுபிடி அதிகமாக இருந்ததால், பொதுமக்களும் வெளியே வருவதில் தயக்கம் காட்டினர்.
ஆடி மாதம் முடிந்துவிட்ட நிலையில், திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறத் தொடங்கியுள்ளன. மேலும், காவல்துறையினரின் கெடுபிடி குறைந்துள்ளதாலும், வழக்கமான இடங்களிலேயே அவர்கள் சோதனையில் ஈடுபடுவதாலும் அந்த இடங்களைத் தவிர்த்துவிட்டு சுற்றிச் செல்வதை மக்கள் கடைபிடிக்கின்றனர். இன்றுகூட முகூர்த்த நாள் என்பதால் மாநகரில் மக்கள் நடமாட்டம், வாகனங்கள் இயக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் ஊரடங்கை அமல்படுத்துவதால் என்ன நல்ல விளைவு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT