Published : 23 Aug 2020 02:56 PM
Last Updated : 23 Aug 2020 02:56 PM
ஜாதி, மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்டு மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினரின் கண்காணிப்பு பணிகளை தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை எச்சரித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரைகள் கூறி அனுப்பினார். மேலும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்களுக்கு இலவச அரிசி பைகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 7,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9,436 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 3,529 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 3,459 வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 70 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும்.
மாட்டத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 27 கிலோ அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூரில் 25 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்.
சாதி, மதக் கலவரத்தை தூண்டும் வகையிலோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மணக்கரை சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு எங்கேனும் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். மேல மங்கலகுறிச்சியில் ரவுடி துரைமுத்துவின் உடல் அடக்கத்தில் வீச்சரிவாள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் எஸ்பி.
அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT