Published : 23 Aug 2020 12:21 PM
Last Updated : 23 Aug 2020 12:21 PM

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக எல்லைக்கு முந்தைய மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகேதாட்டு அணை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மைசூருவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு இதை அறிவித்த எடியூரப்பா, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து விரைவில் பெறப்படும்; கர்நாடகத்தின் பாசனப்பரப்பை பெருக்குவது தான் தமது அரசின் லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றை நம்பியுள்ள பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்ற அச்சம் தான் விவசாயிகளின் பதற்றத்திற்கு காரணமாகும்.

உண்மையில் மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று எடியூரப்பா மட்டுமல்ல... கர்நாடகத்திலிருந்து யார் கூறினாலும் அதைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. காரணம்... காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் யாராலும் அணை கட்ட முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணை கட்டுவதற்கான நிபந்தனைகளைக் காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக வரையறுத்துள்ளன.

கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்பதுதான் மிகவும் முக்கியமான நிபந்தனை ஆகும். மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருக்கிறார்.

ஆனாலும், மத்திய அரசும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளும் விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டு, கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படக்கூடும்; அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன என்பது தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேகேதாட்டு அணை குறித்த கர்நாடக அரசின் எந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.5,912 கோடி செலவில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி கோரும் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

ஒவ்வொரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடும் போதும், அதில் கர்நாடக அரசின் கோரிக்கை குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும், தமிழக அரசின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏதேனும் ஒரு கூட்டத்தில், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசின் கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்தின் நிலை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது, அப்படி நடக்காது என்றும் உறுதியாக கூற முடியாது.

காவிரி சிக்கலைப் பொறுத்தவரை மத்தியில் ஆளும் அரசுகள் கர்நாடகத்துக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வருகின்றன. அந்த துணிச்சலில் தான் எடியூரப்பா போன்றவர்கள் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்கிறார்கள்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுவதற்கு எள் முனையளவும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் நிம்மதியாக இருக்க முடியும்.

எனவே, மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x