Published : 23 Aug 2020 11:06 AM
Last Updated : 23 Aug 2020 11:06 AM
புதுச்சேரியில் கரோனா பாதிப்பை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட மத்திய மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது
இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் கரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் சராசரியாக சுமார் 300 நோயாளிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளது.
எனவே, கரோனா மேலாண்மை பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை அவசரமாக நியமிக்குமாறு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், புதுவையில் கரோனா பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொது சுகாதார இயக்குநரகம் 3 நிபுணர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்துள்ளது.
அக்குழுவில், ஜிப்மர் சமுதாய மருத்துவத் துறை தலைவர் சோனாலி சர்க்கார், மைக்ரோ பயாலஜி துறை பேராசிரியர் சுஜாதா, சுவாச மருத்துவத்துறை பேராசிரியர் சகா வினோத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் பொது மருத்துவ இயக்குநரகம் முதன்மை மருத்துவ அதிகாரி தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், "மருத்துவக் குழுவினர் மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் கட்டுப்பாட்டு மண்டலங்களை ஆய்வு செய்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலாண்மை பணிகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையில் மத்திய, மாநில சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும்.
இறுதி ஆய்வறிக்கை மற்றும் ஆலோசனைகளை ஆளுநர் மற்றும் மாநில சுகாதாரத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் அதன் நகலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT