Published : 23 Aug 2020 09:12 AM
Last Updated : 23 Aug 2020 09:12 AM

ஆறு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த அபயாரண்யம் முகாம் மீண்டும் தொடக்கம்

கூடலூர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு,பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய மூன்று முகாம்களில் 27 வளர்ப்புயானைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய 2 இடங்களில் முகாம்கள் செயல்பட்டன.

இங்குள்ள யானை முகாம்களில், தெப்பக்காடு பகுதியிலுள்ள முகாமில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மற்ற இடங்களிலுள்ள முகாம்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால், அபயாரண்யம் யானைகள் முகாம் பிரதான சாலையோரத்தில் இருப்பதால், அந்த வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி, எந்தவித அனுமதியும் இன்றி முகாம்களுக்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், அங்குள்ள யானைகள் பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய இரண்டு இடங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் விழுந்து, பாம்பேக்ஸ் முகாம் சேதமடைந்தது. தற்காலிகமாக இருந்த ஈட்டி மரம் முகாமும் மூடப்பட்டது. இதையடுத்து, அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுவரப்பட்டன. மீண்டும் அபயாரண்யம் முகாமில் யானைகளை பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தற்போது மூர்த்தி, வசீம், ஜம்பு, விஜய், இந்திரா, கிருஷ்ணா, சீனிவாசன், சங்கர், இந்தர் ஆகிய ஒன்பது யானைகள் அபயாரண்யம் முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘பாம்பேக்ஸ் பகுதியிலுள்ள முகாம் மழையால்சேதமடைந்ததால், தற்காலிகமாகவே அபயாரண்யம் முகாமில்யானைகள் பராமரிக்கப்படுகின்றன. பாம்பேக்ஸ் முகாம் சீரமைக்கப்பட்டு, யானைகள் எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம்.

வனப்பகுதியில் பிடிக்கப்படும் காட்டு யானைகளை கூண்டில் அடைத்து பழக்குவதற்கு, பாம்பேக்ஸ் முகாமில்தான் கரால் உட்பட பல்வேறு வசதிகளும், பாதுகாப்பும் உள்ளன’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x