Published : 22 Aug 2020 07:17 PM
Last Updated : 22 Aug 2020 07:17 PM
இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறுவது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“புதுடெல்லியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யுனானி உட்பட அலோபதி அல்லாத மருத்துவர்கள் 37 பேர் இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த முகாமில் மொத்த பயிற்சியும் இந்தி மொழியிலேயே நடைபெற்றுள்ளது.
பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்தி பேசும் மாநிலங்கள் அல்லாத மருத்துவர்கள் கேள்வியெழுப்பியபோது, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கொடேசா ‘எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசவராது, நான் இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலம்தான் வேண்டுமென விரும்புபவர்கள் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறலாம்’ என்று ஆணவமாக கூறியுள்ளார். ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறுவது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.
எனவே, மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிட்டு இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலான பயிற்சி வகுப்புகளில் இந்தி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT