Published : 22 Aug 2020 06:01 PM
Last Updated : 22 Aug 2020 06:01 PM
நான்கு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், தற்போதும் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதன் பின்னர் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இத்தொழில்கள் மீண்டு வர இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது ஆகும். எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் அடுத்த ஆறு மாத காலத்திற்கு வட்டித் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவி இன்னும் ஒரு வாரத்தில் நிரப்பப்படும். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தான் தற்போது இந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளோம் . நான்கு கட்டங்களாக இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களுடைய திட்டம் வெற்றிகரமான திட்டமாகும். இரண்டு அல்லது மூன்று தலைநகரமாகக் கூட இருக்கலாம். நாம் 6 தலைநகரைக் கூட வைத்துக் கொள்ளலாம்.
நம்முடைய அரசாக இருந்தாலும் சரி வேறு அரசாக இருந்தாலும் சரி, பொது நன்மை கருதி ஒன்று கூறினால், அதனை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கும், நல்லது மக்களுக்கும் நல்லது.
விநாயகர் மீது மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உடைய ஒரு அரசியல் இயக்கமாகத் திகழ்கிறது . தனிமனிதர்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் இயக்கம் அப்படி கிடையாது.
தமிழகத்திலும் அசாம் மாநிலத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை. முதலில் அறிவிக்க வேண்டும். பின்னர் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தொகுதி உடன்பாடு ஏற்படும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்பைக் கூறுவார்கள் .எனவே முதலில் தேர்தல் அறிவிக்க வேண்டும். பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளப்படும் . கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படி கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்பட்டோமோ, அதே போல தற்போதும் செயல்படுவோம்.
நாடாளுமன்றத்திலேயே தமிழில் பேசினால் அதை இந்தியில் மொழிபெயர்க்கக் கூடிய வசதி உள்ளது . அந்தந்த மாநிலத்தில் இருந்து வரும் பிரதிநிதிகள் அந்தந்த மாநில மொழிகளில் பேசலாம். இது அங்கீகரிக்கப்பட்ட உரிமை.
மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் நான் கூறுகிற ஒரே கருத்து என்னவென்றால் ஒரு தேர்விற்காக தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. அந்தத் தடையைத் தகர்த்தெறிந்து, வெற்றியின் சிகரத்தை அடைய வேண்டுமே, தவிர தடை வந்துவிட்டது, நான் என்ன செய்வது என்று மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது நல்லது அல்ல. குழந்தைகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சமூகமும்தான் மனத் தெளிவை அளிக்க வேண்டும். நீட் தேர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல ஒரு மாநிலத்தில் இந்த தேர்வு வேண்டாம் என்று அந்த அரசு முடிவு செய்தால் அந்தத் தேர்வை நிறுத்திவிடலாம் .
எந்த மாநிலம் விரும்புகிறதோ அந்த மாநிலம் அந்த தேர்வை நடத்திக் கொள்ளலாம். விரும்பாத மாநிலம் அந்தத் தேர்வை நடத்த வேண்டாம். சட்டப்பேரவையின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு அதை திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆனால், தமிழக அரசு அதை வெளியே கூறாமல் உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் உடன் உள்ளாட்சித் தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என அமைச்சர் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் . ஓபிஎஸ்-இபிஎஸ் பிரச்சனை குறித்து நாம் பதில் கூற முடியாது. வசந்தகுமார் எம்.பி. உடல்நிலை தேறிவருகிறார்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT