Published : 22 Aug 2020 03:42 PM
Last Updated : 22 Aug 2020 03:42 PM

சாலையில் செல்ல ஒரு வாகனத்துக்கு  3 வகை வரிகள்; சுங்கக் கட்டண உயர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை

சுங்கக் கட்டணம் என்ற பெயரில் நேரடியாக சாலை பயன்பாட்டுக் கட்டணம். இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் மீது சாலைக் கட்டமைப்பு வரி. இவை தவிர வாகனங்களை வாங்கும்போது சாலை வரி எனத் தனியாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சாலையைப் பயன்படுத்த 3 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறையின்படி இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இப்போதுள்ள சூழலில் இந்தக் கட்டண உயர்வு ஏற்க முடியாதது.

ஒருபுறம் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் நேரடியாக சாலை பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் மீது சாலைக் கட்டமைப்பு வரி என்ற பெயரில் இன்னொரு வரி வசூலிக்கப்படுகிறது. இவை தவிர வாகனங்களை வாங்கும்போது சாலை வரி என்பது தனியாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சாலையைப் பயன்படுத்த 3 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

கடந்த மே மாதம் கலால் வரி உயர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 32.98 ரூபாயும், டீசல் மீது 31.83 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் தலா 18 ரூபாய் சாலை கட்டமைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் ஒரு பேருந்து அல்லது சரக்குந்து 5 கி.மீ. இயங்குவதாக வைத்துக் கொண்டால், ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.3.60 எரிபொருள் மீதான வரியாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி சென்னையிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்குச் செல்வதாக இருந்தால், ஒரு சரக்குந்து 1,800 ரூபாயை எரிபொருள் வழியான சாலை வரியாகச் செலவழிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு இருக்கும்போது இன்னொரு புறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பதே அநீதியானது. அதுமட்டுமின்றி அந்தக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவது நியாயமே இல்லாதது.

சுங்கக் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கண்மூடித்தனமாக உயரக்கூடும். கரோனா பரவல் அச்சத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக் கட்டண உயர்வைக் குறைந்தது ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x