Published : 22 Aug 2020 02:41 PM
Last Updated : 22 Aug 2020 02:41 PM

கோயில்களில் வைக்கப்படும் சிலைகளை இந்து சமய அறநிலையத் துறையினர் நீர் நிலைகளில் கரைக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை

கரோனா தொற்றுப் பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தி பொது ஊர்வலங்களுக்குத் தடை உள்ள நிலையில், வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கோயிலில் வைக்கலாம். அவ்வாறு வைக்கப்படும் சிலைகளை இந்து சமய அறநிலையத் துறையினர் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மதத் திருவிழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட அரசு தடை விதித்தது. உயர் நீதிமன்றமும் தடை விதித்தது.

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலம் தொடர்பாக தமிழ்நாடு சிவசேனா தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் இல.கணபதி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது என்ற அரசு உத்தரவை உறுதிப்படுத்திய நீதிபதிகள், தனி நபர்கள் மட்டும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கலாம் என்று அனுமதி அளித்தும், சென்னை மெரினா கடற்கரையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளைக் கரைக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கோயில்களில் வைக்கப்படும் சிலைகளை அறநிலையத் துறையே சேகரித்துக் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன் இன்று தமிழக அரசுத் தரப்பில் அவரச முறையீடு செய்யப்பட்டது.

அந்த முறையீட்டை ஏற்று இன்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் வழிபட்ட பிறகு கோயில்களில் கொண்டு வந்து வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க அனுமதித்து உத்தரவிட்டது.

அதேசமயம், நேற்று பிறப்பித்த உத்தரவில், தனி நபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு முடித்த சிலைகளை அவர்கள் வீட்டின் முன் வைக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உத்தரவின் இந்தப் பகுதியில், "வழிபாட்டிற்குப் பின்னர் வீட்டின் முன் வைக்கலாம்" என்ற பகுதியை மட்டும் நீக்குவதாக நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

இதன் மூலம் விநாயகர் சிலைகளைக் கோயில்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும் அல்லது தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x