Published : 21 Aug 2020 07:00 PM
Last Updated : 21 Aug 2020 07:00 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் 'பிரிகேட்' மோட்டார் சைக்கிள் ரோந்து தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு ரோந்து பணிகளுக்காக தமிழக அரசு 16 புதிய மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளது.
இந்த புதிய மோட்டார் சைக்கிள்களை கொண்டு 'பிரிகேட்' (Brigade) என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ரோந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 'பிரிகேட்' மோட்டார் சைக்கிள் ரோந்து படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த தனிப்படை குறித்து எஸ்பி கூறியதாவது: புதிய மோட்டார் சைக்கிள்களில் அவசர ஒலிப்பான் (Siron), ஒளிரும் விளக்குகள் (Flashing light), சிறிய ஒலி பெருக்கி ( Public Address System) ஆகிய வசதிகள் உள்ளன. ஒரு விபத்து ஏற்பட்டால், அதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி செய்யக்கூடிய அளவில் மருந்துப் பொருட்கள் இந்த மோட்டார் சைக்கிள்களில் தயார் நிலையில் இருக்கும். மொத்தத்தில் நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இவைகளில் செய்யப்பட்டுள்ளன.
இந்த 16 வாகனங்களில் தூத்துக்குடி நகர துணை கோட்டத்துக்கு 5, தூத்துக்குடி ஊரக துணை கோட்டத்துக்கு 2, திருச்செந்தூருக்கு 2, ஸ்ரீவைகுண்டத்துக்கு 2, மணியாச்சிக்கு 1, கோவில்பட்டிக்கு 2, விளாத்திக்குளத்துக்கு 1 மற்றும் சாத்தான்குளத்துக்கு 1 என இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 'பிரிகேட்' ரோந்து படை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்களுக்கு அந்தந்த துணைக் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் உத்தரவுப்படி பணியாற்ற வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும். இவர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பதை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.
பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அருகில் இருக்கும் இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டு, அவர்கள் சென்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இந்த 'பிரிகேட்' தனிப்படையினர் பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவர்களது அவசர உதவிக்கு விரைந்து சேவைபுரிய வேண்டும் என்றார் எஸ்பி.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வன், கோபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை ஆய்வாளர் ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ராஜா மற்றும் ஆயுதப்படை காவலர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT