Last Updated : 21 Aug, 2020 06:02 PM

1  

Published : 21 Aug 2020 06:02 PM
Last Updated : 21 Aug 2020 06:02 PM

மதுரை 2-வது தலைநகர் கோரிக்கையை திசைதிருப்ப வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை  

மதுரை 2-வது தலைநகரமாக உருவாக்கப்பட்டால் அங்கு புதிய கட்டமைப்பு, வேலை வாய்ப்பு உருவாகுமே தவிர எவ்வித உள்நோக்கமும், அரசியலும் கிடையாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தென் மாவட்ட தொழில் வர்த்தக சங்க அமைப்புகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் மதுரையில் இன்று நடந்தது.

தொழில்வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது:

மதுரையில் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க இப்போதுதான் ஞானோதயம் பிறந்ததா என, சிலர் கேட்கலாம். இது காலத்தின் கட்டாயம். மக்கள் உணர்வு, எதிர்பார்ப்பு, கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டியதுஅரசின் கடமை.

இது காலங்காலமாக கேட்ட நிலுவை கோரிக்கை. தேவையா, சாத்தியமா என்பதை மக்களின் கருத்துக்களைக் கேட்டு தான் தனது கடமையை செய்யும். தென்மாவட்ட வளர்ச்சிக்காக தொழில் வர்த்தக சங்கம், 20 ஆண்டாக கேட்டு வந்த இக்கோரிக்கைக்கு அமைச்சர்கள் செல்லூர்ராஜூ , பாஸ்கரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் போன்றறோரும் ஆதரவளித்துள்ளனர். 2வது தலைநகர் கோரிக்கையை பலர் தவறாகப்புரிந்து கொள்கின்றனர்.

அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களுக்காக மக்கள் சென்னை நோக்கிச் செல்வதால் நெருக்கடி ஏற்படுகிறது. தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இக் கோரிக்கை எழுந்துள்ளது. 2-வது தலைநகரம் மதுரைக்குள் அமைய வேண்டும் என்பதல்ல. மதுரை- திருச்சி அல்லது சிவகங்கை – மதுரை இடையில் கூட அமையலாம்.

தமிழக வளர்ச்சிக்கென அரசு பல்வேறு சாதனைகள் புரிகின்றன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டம் உதயம் ஒரு மாவட்டத்தின் உரிமையைப் பறிப்பது அல்ல.

இது பற்றிய சரியான புரிதலை மக்களிடத்திலே கொண்டு சேர்க்கவே இது போன்ற கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை தொழில் நகரமாக மாறியது. அங்கு விவசாயமில்லை என்றாலும் வட, தென் மாவட்டங்களில் விவசாயம் இருக்கிறது.

இத்துறை தொடர்பான கோரிக் கையை துரிதமாக நிறைவேற்ற நிர்வாகவசதிகள் தேவை. முதல்வர் உட்பட அனைவரின் மனம் கனிந்து சென்னையிலுள்ள முக்கியமான 25 துறைகள் மதுரைக்கு வந்தால் விவசாயம் செழிக்கும், புதிய கட்டமைப்பு, வேலை வாய்ப்பு உருவாகுமே தவிர எவ்வித உள்நோக்கமும், அரசியலும் கிடையாது.

கேபினட் கூட்டத்தில் இக்கோரிக்கையை எழுப்பி இருக்கலாம் என, சிலர் கூறுகின்றனர். இடம் முக்கியமல்ல. தேவை, நியாயம் இருக்கிறதா என, பார்க்கவேண்டும். நானும் மதுரை சேர்ந்த வாக்காளர் என்ற முறையில் கருத்து கூறலாம் அல்லவா? ஏற்கெனவே மதுரையில் கல்லூரி களில் படிக்கும்போதே மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி போராடி இருக்கிறேன்.

எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதி என்ன வளர்ச்சி கண்டார்கள் என, அடுத்த தலைமுறையினர் கேள்வி கேட்பார்கள். வரம் கொடுக்கும் சுவாமியாக தமிழக முதல்வர் உள்ளார். அவரிடம் கேட்கிறோம்.

அவர் தான் தீர்ப்பளிக்கவேண்டும். அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கருத்து, ஆலோசனைகளை சொல்ல உரிமை உள்ளது.

திருச்சியை தலைநகராக்க வேண்டும் என, அமைச்சர்கள் கருத்து கூறினால், அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காக கேட்கிறார்கள். இதில் தவறில்லை. இரண்டாவதுதலை நகரம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து என்பதை புரிய வைக்க வேண்டி உள்ளது. மூன்று நாட்கள் நன்றாக வந்து கொண்டிருந்தது. அந்தp பாதை திடீரென மாறியது. இக் கோரிக்கையை யாரும் திசை திருப்ப வேண்டாம்.

நிர்வாக வசதி களை பரவலாக்கவேண்டும் என்பதே இக்கோரிக்கையின் முக்கிய நோக்கம். தற்போது கரோனா நேரத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் வீட்டில் இருந்து பணி செய்யலாம் (ஒர்க் அட் ஹோம்) என்பது போன்று, மதுரையில் இருந்து சில முக்கிய அலுவல கங்கள்(ஒர்க் அட் மதுரை) செயல்படலாம் என, கூறுகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x