Published : 21 Aug 2020 03:48 PM
Last Updated : 21 Aug 2020 03:48 PM
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற்று மீண்டு வந்து, தமிழகத்தில் அவர் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மந்தித்தோப்பு பூமா தேவி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த அடிமை பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை.
தமிழகத்தில் மீண்டும் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என ரசிகர்கள் நாள்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்தளவுக்கு தமிழ் மக்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வலியுறுத்தி உள்ளார்.
அவர் நலம் பெற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற்று மீண்டும் வந்து அவரது குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம், என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT