Published : 21 Aug 2020 03:25 PM
Last Updated : 21 Aug 2020 03:25 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தாலோ, வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட எல்கையான சங்கரன்கோவில் - கழுகுமலை சாலையில் காவல் சோதனைச்சாவடி திறப்பு விழா நடந்தது.
இதற்கு கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து, கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கழுகுமலையையடுத்த கே.வேலாயுதபுரத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட 41 கண்காணிப்பு கேமராவையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர்கள் அய்யப்பன், முத்து, முத்துலட்சுமி, தொழிலதிபர் மகேஸ்வரன், திமுக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் சுப்பிரமணியன், பாஜகவை சேர்ந்த போஸ் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மாவட்டத்தில் சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கத்தி வைத்திருந்தால் கூட அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்கிறோம்.
நாட்டு வெடிகுண்டுகளை அனுமதிக்க முடியாது. அதை வைத்திருந்தாலும், தயாரித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மாவட்டத்தில், போதைப் பொருள்களை ஒழிக்க 3 தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் தனிப்படையினர் மூலம் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் திருச்செந்தூரில் அதிக மதிப்பு கொண்ட 25 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து, எங்கிருந்து சாரஸ் போதைப்பொருள் வருகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்தாலோ, அல்லது வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT