Published : 21 Aug 2020 02:59 PM
Last Updated : 21 Aug 2020 02:59 PM

டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடப்பதாக தொமுச அறிவிப்பு

17 ஆண்டுகள் நிரந்தரமில்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக தொமுச பேரவை அமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:

“டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கடைகளில் 26 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்கள். டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நிலையோ பரிதாபத்திற்குரியது. கடந்த 17 ஆண்டுகளாக மதுபானக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பகுதி நேர தொகுப்பூதிய ஒப்பந்த பணியாளர்களாகவே பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர்களே யாரும் கிடையாது. அரசு வருவாய்த் துறையிலிருந்து அயல் பணியாளர்களாக அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

அரசுத் துறையிலிருந்து வந்து பணியாற்றும் அதிகாரிகள் வழிகாட்டும் முறையில் தான் மதுபான விற்பனை நடைபெற்று வருகின்றது. டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் குறைவான ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரத்தை இழந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் மதுபானக் கடைகளில் அமைப்பதில் தொடங்கி அன்றாடப் பராமரிப்பு வரையிலும் அனைத்து பணச் செலவுகளும் பணியாளர்கள் தலையில் சுமத்தப்படுகிறது.

தாங்கொணாத துயரத்திலும் மன உளைச்சலிலும் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், அரசு வழியில் ஊதியம் நிர்ணயிக்கக் கோரியும் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்கள் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் பாதுகாப்பற்ற முறையில் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் சில பணியாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும், மற்றுமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த ஜூலை 28 முதல் ஆகஸ்டு 08 வரை பணியாற்றும் நாட்களில் கோரிக்கை அட்டை அணிந்து கோரிக்கை வாரம் நடத்தியுள்ளார்கள்.

டாஸ்மாக் நிறுவனமும் அரசும் செவிசாய்க்காத நிலையில் ஆகஸ்டு 17 முதல் 21 வரை கடையின் முன்னால் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அரசு வருமானத்தை மட்டுமே எதிர்பார்க்கிறதேயொழிய பணியாளர்கள் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இந்த கரோனா தொற்று நோய் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே பணியாற்றும் பணியாளர்கள் நிலையினை கண்டு கொள்ளாத நிலையில் தமிழக அரசு உள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களின் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் அரசு அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்றி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்காதது தொழிலாளர் விரோதப் போக்கை அரசு கையாள்வதாகவே கருத வேண்டியுள்ளது.

பணியாளர்கள் போராட வேண்டிய நிலையினை அரசு உருவாக்கியுள்ளது. எனவே, வருகிற ஆகஸ்டு 25 அன்று இரண்டு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள். டாஸ்மாக் பணியாளர்களின் பணி பாதுகாப்பை கருதி அரசு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அரசு காலம் தாழ்த்துமானால் அனைத்து சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்புதொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x