Published : 21 Aug 2020 10:19 AM
Last Updated : 21 Aug 2020 10:19 AM
மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வகையில் பாஜக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இது அதிமுகவினரிடம் குழப்பத்தையும், திமுகவினரிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதி 1957-ம் ஆண்டு முதல் 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பி.மூர்த்தி எம்எல்ஏ ஆனார்.
2021-ல் நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து பல்வேறு கட்சியினரிடையே போட்டியை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் பி.மூர்த்தி மீண்டும் போட்டியிடுவது உறுதி என்ற நிலை உள்ளது. அதிமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதே தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கெனவே வெற்றி பெற்ற தமிழரசன் மேலூர் தொகுதியை கேட்டு வருகிறார். இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. தொகுதியில் பல இடங்களில் தற்போதே சுவர் விளம்பரங்களை வரைந்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் பாஜக நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் கிழக்குத் தொகுதியிலேயே இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து பாஜக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பாஜகவைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி 2-ம் பட்சமே. முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அங்கு எதிர்த்து போட்டியிட்டு கட்சியை வளர்ப்பதே முக்கியம் எனக் கருதுகிறோம். மாநிலத் தலைமை கிழக்குத் தொகுதியை குறி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப மூர்த்தியை எதிர்த்து தீவிர அரசியலில் இறங்கியுள்ளோம் என்றார்.
வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.னிவாசன், மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டத்தில் எந்தக் கட்சியும் தேர்தல் பணி தொடங்காத நிலையில், கிழக்குத் தொகுதியில் மட்டும் பாஜக தீவிரம் காட்டி வருவது திமுக, அதிமுகவை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மதுரை தெற்குத் தொகுதியில்தான் பாஜக ஓரளவு பலம் பெற்றுள்ளது. இந்நிலையில் கிழக்கை ஏன் தேர்வு செய்கிறது என்ற குழப்பம் அதிமுகவினரிடம் எழுந்துள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறுகையில், ‘இத்தொகுதியில் திமுக பலம் அறிந்து அதிமுகவே ஒதுங்க நினைக்கும்போது பாஜகவுக்கு ஏன் இந்த ஆசை. அக்கட்சி போட்டியிட்டால் எளிதாக திமுக வெற்றி பெற்றுவிடும்’ என்றனர். எஸ்.னிவாசகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT