Published : 21 Aug 2020 07:35 AM
Last Updated : 21 Aug 2020 07:35 AM
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சென்னை மாநகரம், 312-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்கம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நகரங்களின் தூய்மையை மதிப்பிட்டு, தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகள் மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், பொதுமக்களின் கருத்துகள், மத்தியஅரசு பிரதிநிதிகளின் கள மதிப்பீடுஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் கடந்த 2017-ம்ஆண்டு 235-வது இடத்திலிருந்த சென்னை மாநகராட்சி, 2018-ல் 100-வது இடத்துக்கும், 2019-ல் 61-வது இடத்துக்கும் முன்னேறியது. இதற்காக அப்போது தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநில தலைநகரங்களில் வேகமாக முன்னேறி வரும் நகரம் என்ற விருதை சென்னை மாநகராட்சி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 4,242 நகரங்களில் சென்னைமாநகராட்சி 312-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. தேசிய அளவில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர்முதலிடத்தை பிடித்துள்ளது.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் மொத்தம் 47 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னைக்கு 45-வது இடம் கிடைத்துள்ளது. கோவைக்கு 40-வது இடமும், மதுரைக்கு 42-வது இடமும் கிடைத்துள்ளன. இந்த பட்டியலிலும் சென்னை மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் புதுமையான திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தியதற்கான பிரிவில் முதலிடம் கிடைத்திருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. திறந்தவெளியில் அசுத்தம் செய்யும் பழக்கம் இல்லாத நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 சதவீதம் வீடு வீடாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து பெறும் நடைமுறை அமலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பொதுக் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. மேலும் திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்காதது தொடர்பான வழக்குகளும் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் நடைபெற்றுவருகின்றன. இதனாலேயே சென்னை மாநகராட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷிடம் கேட்டபோது, “மாநகராட்சி சார்பில், மாநகரத்தில் தூய்மையைக் காக்க ஏராளமான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்மூலம் குப்பைக் கிடங்குகளுக்கு செல்லும் குப்பைகளின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. மாநகராட்சியில் தூய்மையை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT