Published : 21 Aug 2020 07:09 AM
Last Updated : 21 Aug 2020 07:09 AM

இந்து தமிழ் செய்தி எதிரொலி: முதியவர் வீட்டுக்கு கதவு வழங்கினார் காஞ்சி எஸ்.பி; வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்டிவாக்கம் ஊராட்சியில் முதியவர் குப்பனின் வீட்டுக்கு நேரில் சென்று குறைகளை கேட்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா.

காஞ்சிபுரம்

வீட்டுக்கு கதவு இல்லாததால் கழிப்பறையில் உணவுப் பொருட்களை வைத்துப் பயன்படுத்தி வந்த, முதியவரின் வீட்டுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா நேரில் சென்று, தனது சொந்த செலவில் கதவு அமைத்துக் கொடுத்தார்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் துளசாபுரம் ஊராட்சி, கண்டிவாக்கம் கிராமத்தில் வசிப்பவர் குப்பன்(60). மனைவியை இழந்த இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், சரிவர வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்தார்.

இவர் தனது வீட்டுக்குகதவுகூட இல்லாத சூழலில், சமைத்த உணவுப் பொருட்களை அரசு கட்டிக் கொடுத்த இலவச கழிப்பறையில் வைத்து பாதுகாத்து பயன்படுத்தி வந்தார். இதுதொடர்பான செய்தி நேற்று (ஆக.20) ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது.

இதைத் தொடர்ந்து மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, கண்டிவாக்கம் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று குப்பன் வீட்டுக்கு கதவு அமைத்து கொடுத்தார்.

மேலும் ஆட்சியரிடம் பேசி பசுமை வீடு, முதியோர் உதவித் தொகை ஆகியவற்றையும் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த துரித நடவடிக்கையை அந்த கிராம மக்கள் பாராட்டினர்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரனும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குப்பனுக்கு பசுமை வீடு வழங்க, இப்போது அவர் இருக்கும் இடத்துக்கான ஆவணங்களை தரும்படி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவரது ஆதார் அட்டையில் 59 வயது என்று உள்ளது. ஆனால் குப்பனுக்கு 70 வயது இருக்கலாம் என்றும், ஆதார் அட்டையில் முறைப்படி திருத்தி முதியோர் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x