Last Updated : 11 Mar, 2014 12:00 AM

 

Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ்: நாளை வேட்பாளர் அறிவிப்பு

பாரதிய ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. மார்ச் 12-ல் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்ததும் வேட்பாளரை அறிவிக்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.

மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்லி மத்திய அமைச்சர் நாராயணசாமியின் விழாக்களைப் புறக்கணித்து வந்த ரங்கசாமி, அண்மை நாட்களாக நாராய ணசாமி பங்கேற்ற விழாக்களில் பங்கேற்றார். இதை வைத்து அவரை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்துவர நாராயணசாமியும் முயற்சி மேற்கொண்டார். ஆனாலும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார் ரங்கசாமி. அதன்படியே, இப்போது பாஜக கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவது கிட்டத்தட்ட உறுதி யாகிவிட்டது.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் `தி இந்து’விடம் கூறியதாவது:

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைவது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்பினோம். ஆனால், ரங்கசாமி தனது கட்சிக்கு விட்டுத்தரக் கேட்டார். அதன்படி, தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தர பாஜக சம்மதித்திருக்கிறது. ஏற்கெனவே இந்த தொகுதிக்கு பாமக தனது வேட்பாளரை அறிவித்துள்ளதால் அந்தக் கட்சியுடன் பேசி வேட் பாளரை வாபஸ் பெற வைக்கும் முயற்சிகளை எடுப்போம். புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதை பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவிக்க உள்ளார்’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, ``மார்ச் 12-ல் சட்டப்பேரவை கூடுகிறது. ஜோதிடப்படி அன்று சுபநாள் என்பதால் பிற்பகலில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் ரங்கசாமி’’ என்றனர். பாமக தரப்பிலோ, “பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் சேர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.

தமிழக கூட்டணி முடிவுக்கு பிறகு புதுச்சேரி பற்றி முடிவு செய்வர். கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்றனர்.

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி:

பாஜக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், புதுச்சேரி மாநில பாமக அவசரக்கூட்டம் வேட்பாளரும் மாநிலச் செயலாளருமான அனந்தராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், புதுச்சேரியில் பாமக கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். “புதுச்சேரி முழுக்க பாமக பிரச்சாரம் செய்துவிட்டது.

எனவே, தமிழகத்தில் மட்டும் பாஜக-வுடன் கூட்டணி. புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடலாம் என கட்சி தலைமையிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம்” என்கின்றனர் புதுச்சேரி பாமக நிர்வாகிகள். முதல்வர் ரங்கசாமியோ, ‘’புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்டாயம் போட்டியிடும்’’ என்று உறுதிபட தெரிவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x