Published : 21 Aug 2020 07:02 AM
Last Updated : 21 Aug 2020 07:02 AM

28 செ.மீ. உயரத்தில் சந்தனத்தில் உருவாக்கப்பட்ட நர்த்தன விநாயகர் சிற்பம்: திருமழிசை கைவினை கலைஞர் அசத்தல்

திருவள்ளூர்

சந்தன மரத்தில் 28 செ.மீ. உயரம் மற்றும் 18 செ.மீ. அகலத்தில் நர்த்தன விநாயகர் சிற்பத்தை திருமழிசை கைவினை கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை சேர்ந்தவர் டி.கே.பரணி(51). கைவினை கலைஞரான இவர், தன் தாத்தா, தந்தைவழியில் அரிசி மற்றும் சந்தனமரத்தில் சிற்பங்களை உருவாக்கும் பணியில் கடந்த 31 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

அரை அரிசி முதல், 4 அரிசி வரை பயன்படுத்தி, திருவள்ளுவர், மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் சிற்பங்களை உருவாக்கியுள்ளார் டி.கே.பரணி. அதுமட்டுமன்றி 5 செ.மீ. முதல் 4 அடி உயரம் வரை, சந்தன மரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, பகவத் கீதை உபதேச காட்சிகள், முன்னால் முதல்வர்களான காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தற்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சந்தன மரத்தில் 28 செ.மீ. உயரம் மற்றும் 18 செ.மீ. அகலத்தில் நர்த்தன விநாயகர் சிற்பத்தை டி.கே.பரணி உருவாக்கியுள்ளார்.

தாமரை மலரை யானை தாங்கி நிற்க, அதன்மேல் நின்று விநாயகர் நடனமாடுவது போன்று சிற்பம், கலை நுணுக்கத்துடன் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. விநாயகரை சுற்றி, அவரது வாகனமான எலிகள் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைப்பது போன்று, இந்த சிற்பம் நுண்ணிய, சிறந்த வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

150 கிராம் எடை கொண்ட இச்சிற்பத்தை உருவாக்க 3 மாதங்கள் ஆனதாக டி.கே.பரணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x