Published : 20 Aug 2020 09:47 PM
Last Updated : 20 Aug 2020 09:47 PM

நாட்டிலேயே 42-வது தூய்மை நகரம் மதுரை: தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மதுரை

தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே 42-வது தூய்மை நகரமாக மதுரை இடம்பெற்றுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பு நடந்தது.

பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் நகரின் சுகாதாரம், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது எனக் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களே அவர்கள் நகருக்கான மதிப்பெண்ணை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அத்தோடு மத்தியில் இருந்து வரும் சுகாதாரக் குழுப் பார்வையிடல், மாநகராட்சிகளில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தியது உள்ளிட்டவை அடிப்படையிலும் ஆண்டுதோறும் சுகாதார நகரங்கள் தரவரிசைப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

இதற்காகப் பொதுமக்கள், தங்கள் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ss2020 voteForYourCity என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

அதுபோல், கூகுளில் swachh survekshan2020 டைப் செய்து, அதில் வரும் இணைப்பைத் தேர்வு செய்து பங்கேற்றனர். இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் நகரங்களைப் பிரித்து நடத்தப்பட்டது. அதில், 10 லட்சத்திற்கு மேலான நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் மதுரை உள்பட சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளும் இடம்பெற்றன.

தற்போது தூய்மை நகரங்கள் தேர்வு முடிந்து அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 42-வது இடம் பிடித்துள்ளது. கோவை 40-வது இடமும், சென்னை 45-வது இடமும் பெற்றுள்ளது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைக் காட்டிலும் வடமாநிலங்களில் உள்ள நகரங்கள் தூய்மையான நகரங்களாக, தரவரிசைப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையில் மட்டுமில்லாது மக்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றது, பார்வையிட வரும் அதிகாரிகள் வழங்கும் மதிபெண் ஆகியவற்றின் அடிப்படையிலே இந்த சுகாதாரமான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, நகரம் தூய்மையாக இல்லை என்று அர்த்தமில்லை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x