Published : 20 Aug 2020 07:12 PM
Last Updated : 20 Aug 2020 07:12 PM
ஓணம், மற்றும் விநாயகர் சதுர்த்தி சீஸனை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்கள் விலை அதிகரித்திருந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.600க்கு விற்பனை ஆனது.
கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக தோவாளை மலர் சந்தையில் பெயரளவிற்கு மட்டுமே மலர் விற்பனை நடந்து வருகிறது. ஆடி மாதத்திலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூக்களை வாங்க குறைந்த அளவே வாடிக்கையாளர்கள் வந்தனர். திருமணம், விழாக்களும் இல்லாததால் மலர் வியாபாரிகள் தினக்கூலி கூட கிடைக்காமல் சிரமமடைந்து வருகின்றனர்.
வழக்கமாக கேரளாவில் ஓணம் சீஸனை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதனால் ஆண்டுதோறும பூ வியாபாரிகள் நல்ல வருவாயை ஈட்டுவர். தற்போது கரோனா பாதிப்பால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு வீடுகளில் எளிய முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஓணத்திற்கான அத்தப்பூ கோலம் நாளை முதல் போடப்படும். அதற்கான பூக்கள் தேவை ஓரளவு உள்ளது.
அதே நேரம் சீஸன் விற்பனையை பெரிதாக நம்பாத வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து குறைந்த அளவு பூக்களே கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் நேற்று அத்தப்பூ கோலத்திற்கான கலர் கோழிகொண்டை, கிரேந்தி, வாடாமல்லி போன்ற பூக்கள், மற்றும் மல்லிகை, பிச்சி பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. ஓணத்திற்கான அத்தப்பூ, மற்றும் விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் கொண்டாடுவோரின் தேவைக்கான பூக்கள் விற்பனை பரபரப்பாக நடந்தது. இதனால் தேவைக்கு குறைவாக இருந்த பூக்கள் வெகு சீக்கிரமாக விற்று தீர்ந்தன.
மேலும் பூவின் நிலையும் அதிகரித்தது. மல்லிகை பூ கிலோ ரூ.600க்கு விற்பனை ஆனது. பிச்சிப்பூ கிலோ ரூ.350, சம்பங்கி 500, கிரேந்தி 60, ரோஜா 300, வாடாமல்லி 120 என விற்பனை ஆனது. இன்று பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் கரோனா பாதிப்பால் ஓணம், மற்றும் விநாயகர் சதுர்த்தி தேவைக்கு அதிக அளவில் பூக்களை கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் முன்வரவில்லை என தோவாளை மலர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT