Last Updated : 20 Aug, 2020 06:19 PM

1  

Published : 20 Aug 2020 06:19 PM
Last Updated : 20 Aug 2020 06:19 PM

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா ஆக. 29-ல் தொடக்கம்: இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை- நிகழ்வுகள் நேரலை

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையடுத்து, கரோனா காரணமாகத் திருவிழாவின் எந்த நாளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று தேவாலயம் அறிவித்துள்ளது.

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், ஆன்மிகச் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் வேளாங்கண்ணி மாதாப் பேராலயம் உலகெங்கும் லட்சோப லட்சம் பக்தர்களைக் கொண்டது. கிறிஸ்துமஸ் காலங்களிலும் தேவாலயத்தின் பிற திருவிழாக் காலங்களிலும் பல லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டுச்செல்வர். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களே இல்லாமல் திருவிழா நடைபெற இருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வேளாங்கண்ணியில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தினமும் நடைபெறும் திருப்பலி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா 29-ம் தேதி சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் பங்கேற்றுக் கொடியேற்றத்தை நடத்தி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் திருப்பலி பூஜையையும் நடத்தி வைக்கிறார். மறுநாள் 30-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 8-ம் தேதி வரை 9 நாட்களும் தினமும் பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலியும், செபமாலை அன்னையின் மன்றாட்டுகள், நவநாள் ஜெபம் உள்ளிட்டவையும் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நேரலை செய்யப்படுகிறது. நிறைவு நாளான செப்டம்பர் 8-ம் தேதியன்று நடைபெறும் திருவிழா சிறப்பு திருப்பலியில், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கலந்து கொண்டு நடத்தி வைக்கிறார். அன்றைய தினம் மாலை கொடி இறக்கம் நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று பேராலயம் தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளத் தடை விதித்து மாவட்ட நிர்வாகமும் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் ஆகியோர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x