Published : 20 Aug 2020 03:45 PM
Last Updated : 20 Aug 2020 03:45 PM

ஒதுக்கப்படாமல் விடுபட்ட 600 பழக் கடைகள்: கோயம்பேடு வியாபாரிகள் வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

திருமழிசையில் ஒதுக்கப்பட்டது போக மீதமுள்ள 600 பழக்கடை வியாபாரிகளுக்கு சென்னையில் வேறு இடத்தில் இடம் ஒதுக்கக்கோரும் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக அதிக அளவிலான கூட்டம் கூடும் கோயம்பேடு சந்தையை மூட தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது. கோயம்பேட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் திருமழிசை பகுதிக்கும், பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையம் இருந்த இடத்திற்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னைவாழ் வானூர் எஸ்.சி/எஸ்.டி உறவின் முறைகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,

“கோயம்பேடு சந்தையில் 800 பழக்கடைகள் உரிய அனுமதியோடு இயங்கி வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக ஒத்துக்கப்பட்டுள்ள மாதவரம் சந்தையில் 200 பழ கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது, அதன் காரணமாக மீதமுள்ள 600 பழ வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள 600 பழக்கடை வியாபாரிகளுக்கு சென்னையின் வேறு பகுதியில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது மாதவரம் பகுதியிலேயே அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுதாரர் அளித்த மனுவை மூன்று வாரத்தில் பரீசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x