Published : 20 Aug 2020 02:32 PM
Last Updated : 20 Aug 2020 02:32 PM
பல்முனை கண்காணிப்பு முகமையின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.20) வெளியிட்ட அறிக்கை:
"ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்முனை கண்காணிப்பு முகமையின் (Multi Disciplinary Monitoring Agency -MDMA) பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் இந்த முடிவு இயல்பான தொடர் நடவடிக்கை தான் என்றாலும் கூட, அது 7 தமிழர் விடுதலையை கடுமையாக பாதிக்கும். ராஜீவ் கொலை வழக்கு குறித்து இரு வகையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றப் பின்னணி குறித்த வழக்கை சிபிஐயும், அரசியல் பின்னணி மற்றும் சதி குறித்து நீதிபதி மிலப்சந்த் ஜெயின் தலைமையிலான ஆணையமும் விசாரித்து வந்தன.
சிபிஐ அமைப்பின் புலன் விசாரணை அடுத்த சில ஆண்டுகளில் முடிவடைந்து, நீதிமன்ற விசாரணையும் நிறைவடைந்து 1998-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயின் ஆணையமும் அதன் இடைக்கால அறிக்கையை 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த நிலையில், அந்த விசாரணையில் தெரியவந்த விஷயங்கள் குறித்து விசாரிக்க 1998-ம் ஆண்டில் பல்முனை கண்காணிப்பு முகமை ஏற்படுத்தப்பட்டது. அமைக்கப்பட்டு 22 ஆண்டுகளாகி விட்ட பிறகும் அந்த அமைப்பின் விசாரணை முடிவடையவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும், தண்டனைக் காலத்தை விட அதிகமாக கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் இன்றுடன் 711 நாட்களாகி விட்ட நிலையில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இன்று வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விஷயத்தில் ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை. ஆனாலும் நீதிமன்றங்களுக்கு ஏதேனும் காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் தான் பல்முனை கண்காணிப்பு முகமையின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி குறைந்தபட்சம் இன்னும் ஓராண்டுக்கு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட போவதில்லை. அதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர் குறைந்தது இன்னும் ஓராண்டுக்கு தாமதப்படுத்துவார்.
7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க ஏற்கெனவே இரு ஆண்டுகள் தாமதமாகிவிட்ட நிலையில், இன்னும் ஓராண்டு தாமதம் என்பது ஏற்க முடியாதது. அது மிகக்கொடுமையான மனித உரிமை மீறலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
7 தமிழர் விடுதலைக்கும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணைக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. பல்முனை கண்காணிப்பு முகமை அமைக்கப்பட்டதன் நோக்கமே வேறு ஆகும்.
அந்த அமைப்பின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் கூட, அது 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதற்கெல்லாம் மேலாக 7 தமிழர்களும் விசாரணைக் கைதிகள் அல்ல. அவர்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு, அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான தண்டனையையும் அனுபவித்து விட்டனர். அவர்களை மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமும் கூறி விட்டது.
அதன்பிறகும் பல்முனை கண்காணிப்பு முகமையின் அறிக்கை அடிப்படையில் தான் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும் என்று ஆளுநர் கூறுவது அவர்களின் விடுதலையை தாமதப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும்; அது ஆளுநர் போன்ற அரசியலமைப்பு சட்டப்படியான பதவிகளில் இருப்பவர்கள் கடைபிடிப்பதற்கான அணுகுமுறை அல்ல.
பல்முனை கண்காணிப்பு முகமை விசாரணை ஓராண்டுக்குள் முடிவடைந்து விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த விசாரணை இன்னும் எத்தனை ஆண்டுகளில் முடிவடையும் என்பதை கணிக்கவும் முடியாது.
இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஓர் அறிக்கைக்காக காத்திருக்காமல், 7 தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்; அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு ஆளுநரும், அரசும் வகை செய்ய வேண்டும்"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment