Last Updated : 20 Aug, 2020 12:39 PM

 

Published : 20 Aug 2020 12:39 PM
Last Updated : 20 Aug 2020 12:39 PM

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் பதிவைப் புதுப்பிக்க விஏஓ சான்று தேவையில்லை: உயர் நீதிமன்றக் கிளை

மதுரை

தமிழகக் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் பதிவைப் புதுப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் சான்று அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக உறுப்பினர்கள் பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பித்துப் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகக் கட்டுமானத் தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பொன்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் இந்த கரோனா தொற்று காலத்தில் வேலை இன்றிக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் ரூ.1000 நலத்திட்டத்தை முதல்வர் அறிவித்தார்

ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள 2000 ரூபாய் போதுமானதாக இருக்காது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும் கட்டிடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால் இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

வேறு மாநிலத்தை ஒப்பிடும் போது தமிழக அரசு கட்டிடத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை மிக, மிக குறைவானது ஆகும். எனவே நிவாரண தொகையை 5 ஆயிரமாக உயர்த்தித் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தங்கள் பதிவைப் புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் இந்தத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, "நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்காதவர்களும் நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி உடையவர்களே என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

உறுப்பினர்கள் பதிவைப் புதுப்பிப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று அவசியம் என ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு உள்ளது. தற்போது உள்ள சூழலில் அதற்குப் பதிலாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன், நலவாரிய அடையாள அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளித்து தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தற்போது கரோனா தொற்று காலம் என்பதால் பதிவு தபால் மூலமாக தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலரின் சான்று அவசியமில்லை எனக்கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x