Published : 20 Aug 2020 11:40 AM
Last Updated : 20 Aug 2020 11:40 AM

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்; திமுகவின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவர்; ஸ்டாலின் இரங்கல்

ரகுமான்கான்: கோப்புப்படம்

சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ரகுமான்கான் இன்று (ஆக.20) சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவரது மறைவுக்கு, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:

"திமுகவின் 'இடி', 'மின்னல்', 'மழை'யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த திமுகவின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான்கான் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன்.

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

ஆறுதல் கூறவோ இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது; திறனிழந்து திண்டாடுகிறது; உள்ளம் பதறுகிறது.

திராவிட மாணவர் முன்னேற்றக் கழகக் காலந்தொட்டு, திமுகவுக்காக அவர் ஆற்றிய அரும் பணிகள், என் கண் முன்னே நிற்கும் அவரது ஆலோசனைகள், இவற்றுக்கிடையில், கனத்த இதயத்துடன்அவரது மறைவுக்குத் திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய அனைவரும் ரகுமான்கானின் கம்பீரமான உரையால், காந்த சக்திமிக்க கருத்துக்களால் கவரப்பட்டவர்கள். முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்றும் இந்தி எதிர்ப்புப் போரில் மாணவர் பருவத்திலேயே போர்ப்பரணி பாடி நெஞ்சம் நிமிர்த்தி நின்றவர்.

சட்டக்கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி போன்ற கொள்கை வீரம் மிக்க தலை மாணாக்கர்களுடன் இணைந்து தடந்தோள் தட்டி மாணவர் சமுதாயத்திற்கு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் களத்தில், திமுக மாணவரணியில் பம்பரமாக பம்பரத்தை விட வேகமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றியவர்.

1977-ல் முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினரான ரகுமான் கான், தலைவர் கருணாநிதி வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர், அதில் ஒரு ஐந்து ஆண்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக, திமுக தலைவர் கருணாநிதியின் அமைச்சரவையில் செயல்பட்டு, தமிழக வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். இருமுறை சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவராக இருந்த அவர், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து எனக்கு அவ்வப்போது ஆலோசனை தரும் அட்சயபாத்திரம்!

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களுடனான ஆன்லைன் ஆலோசனையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இணைப்பு துண்டித்துப் போனது; ஆனாலும் என்னுடன் வீடியோ காலில் தனியாக வந்து பேசி, எனக்கு கட்சி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி, தம்பிக்கு, பாசம் நிறைந்த அண்ணனாக என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை, 'தம்பி, உங்கள் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை' என்று பிறப்பித்த அன்புக் கட்டளைதான்! பதிலுக்கு நானும் அவரிடம், 'அண்ணே! நீங்களும் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சிறுபான்மைச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் நீங்கள் மிகவும் முக்கியம்' என்று கூறினேன்.

அந்த உரையாடலின் உணர்ச்சிப் பெருக்கில் அவர் கண் கலங்கிய காட்சியைக் கண்டேன். ஆனால் அவர் இன்று என்னைக் கண்ணீர் மல்க வைத்து விட்டு என்னை விட்டு மட்டுமின்றி இந்த இயக்கத்தின் கோடானுகோடித் தொண்டர்களிடமிருந்தும் பிரியா விடை பெற்றுச் சென்று விட்டார் என்பதை என் மனம் அறவே ஏற்க மறுக்கிறது.

கருணாநிதியின் போர்வாளான முரசொலியில் இனி ரகுமான்கான் எழுதும் கட்டுரைகளை எங்குபோய்த் தேடிப் படிப்பேன்?

நான் எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவாரே அவரின் குரலை இனி எங்குதான் கேட்பேன்?

அவர் அளித்தது போன்ற அற்புதமான ஆலோசனைகளை இனி யாரிடம் பெறுவேன்?

ஆற்றல் மிக்க - அன்பு மிக்க - இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரை இழந்து பரிதவிக்கிறேன்; இயக்கத் தோழர்களுக்கு ஆறுதல் சொல்ல இயலாமல் தத்தளித்து நிற்கிறேன்.

அவரின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் முரசொலி கட்டுரைகளும் முழங்கிய மேடைப் பேச்சுகளும் என்றும் நம் கண்களிலே இருக்கும்; காதுகளிலே ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

ரகுமான்கானின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.ரகுமான்கான் இன்று காலை, சென்னை தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார்.

அவரது மறைவினையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளையும், மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x