Published : 20 Aug 2020 07:43 AM
Last Updated : 20 Aug 2020 07:43 AM

காளையார்கோவில் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டி விட்டு 7 ஆண்டுகளாக மறந்துபோன மின்வாரியம்: குருவிக்காக இருளில் வாழ்ந்த மக்களின் கிராமத்தில் சோகம்

பொத்தகுடியில் மின்மாற்றியில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டி வைத்துள்ள மின் ஊழியர்கள்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மின்மாற்றியில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மரத்தில் கட்டி வைத்துவிட்டு 7 ஆண்டுகளாகியும் சரி செய்யவில்லை. இதனால் மின்மாற்றி காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

காளையார்கோவில் அருகே சேதாம்பல் ஊராட்சி பொத்தகுடி யில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்துக்குசிரமம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அக்கிராமத்துக்கு குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் மோட்டார், கிரைண்டர், மிக்சி போன்ற மின்சாதனப் பொருட் களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு முன்பு, பொத்தகுடியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் செய்த 2-வது நாளிலேயே மின்மாற்றி அருகேயுள்ள ஒரு மின்கம்பத்தில் தனியார் ஒருவரின் ஜேசிபி இயந்திரம் மோதியது. இதனால் மின்கம்பம் சேதமடைந்தது.

இதையடுத்து மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அறுந்துவிழுந்த மின்கம்பியை அருகேயுள்ள மரத்தில் மின்ஊழியர்கள் கட்டி வைத்தனர். அதன்பிறகு 7 ஆண்டுகளாக சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யவும் இல்லை, மின் இணைப்பும் கொடுக்கவில்லை. இதனால் பொத்தகுடி கிராம மக்கள் தொடர்ந்து குறை மின்னழுத்தத்தால் சிரமம் அடைந்து வருகின்றனர். குருவிக்காக 45 நாட்கள் தெருவிளக்குகளை எரிய விடாமல் இருளில் தவித்த பொத்தகுடி கிராம மக்களை மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாதது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மின்கம்பத்தை ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்திய போதே, மின்வாரிய ஊழியர்கள் அபராதமும் வசூலித்து விட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.

மின்வாரிய செயற்பொறியாளர் கூறுகையில், ‘பொத்தகுடியில் மின்மாற்றி பழுதானது குறித்து எனக்கு தெரியாது. விரைவில் சரிசெய்யப்படும் என பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x