Published : 19 Aug 2020 09:43 PM
Last Updated : 19 Aug 2020 09:43 PM

ஜெகத்ரட்சகனுக்கு  சம்மன் : கைது செய்யக்கூடாது: சிபிசிஐடிக்கு  உயர் நீதிமன்றம் தடை

பழைய வழக்கு ஒன்றில் ஆஜராக ஜெகத்ரட்சகன், அவருடைய மகனுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தொடர்ந்த வழக்கில் சம்மனுக்கு ஆஜராக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடைவிதித்துள்ளது.

அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரான திமுக-வை சேர்ந்த ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கினார். அந்த நிறுவனம் தனக்குத்தான் உரிமை உள்ளது என்று தாஸ் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி அந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருவதாக தெரிவித்து அதனடிப்படையில் அமலாக்கத் துறை தனக்கு சம்மன் அனுப்பி உள்ளது என ஜெகத்ரட்சகன் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, சட்டவிரோதம் என்றும் விதிகளுக்கு முரணானது என்றும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு நான்கு வாரம் தடை விதித்து விசாரணையை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியதாகவும், “2016-ல் பதிவான இரு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடிந்த ஒரு விசயத்தை மீண்டும் சிபிசிஐடி கையில் எடுத்திருக்கிறது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனது கல்வி நிறுவனங்களில் தேவையற்ற முறையில் நுழைந்து விசாரணை செய்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிய மனு, நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சிபிசிஐடி தரப்பில் ஜெகத்ரட்சகனின் மகன் ஆனந்துக்குத்தான் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், ஆவணங்கள் தாக்கல் செய்ய சொன்னதாகவும் கூறப்பட்டது. தாங்கள் சம்மன் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும் ஆனால் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் ஜெகத்ரட்சகன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் சம்மனுக்கு ஆஜராகி ஆவணங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஜெகத்ரட்சகன் தரப்பிற்கும், கைது நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என சிபிசிஐடி-க்கும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜெகத்ரட்சகன் மனு குறித்து சிபிசிஐடி, புகார்தாரர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x