Published : 19 Aug 2020 09:45 PM
Last Updated : 19 Aug 2020 09:45 PM
ரயில்வே துறை கரோனா ஊரடங்கிலும் பல்வேறு சவால்களுடன் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளைக் கையாண்டு மக்களுக்கு சிறந்த சேவை புரிந்துள்ளது என, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் இணைய வழியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி , மதுரை கோட்டம் தண்டவாள பராமரிப்பு , மின்தடங்கள் , சைகை அமைப்புக்கள் வேலைகளை செய்து முடித்திருக்கிறோம். இப்பணிகளை போக்குவரத்து இருக்கும்போது செய்வது கடினம்.
கடம்பூர்- வாஞ்சி மணியாச்சி -தட்டப்பாறை / வாஞ்சி மணியாச்சி - கங்கைகொண்டான் பிரிவில் 44 கி.மீ தூரத்திற்கு ரயில்வே இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது மதுரைக்கு தெற்கே நிறைவுசெய்யப்பட்ட முதலாவது இரட்டைபாதை.
இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பாதையில் விரைவாக ரயில்களை இயக்கலாம். மதுரை –வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டைபாதையின் மொத்த தூரம் 159 கி.மீ. திட்ட செலவு ரூ .1536 கோடி . 2020-21-ஆம் ஆண்டு , 101 கி.மீ தூரம் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீளவிட்டான் - மேல்மருதூர் புதிய ரயில் பாதைக்கென மீளா விட்டான் யார்டில் மறுசீரமைப்பு பணிகளும் நிறைவு பெற்றது. இது மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமைய இருக்கும் புதிய வழித்தடத்தின் ஒரு பகுதி.
மதுரை -உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதை பிப்ரவரி 2020 -ல் திறக்கப்பட்டது. மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டத்தின் தற்போதைய திட்ட மதிப்பு ரூ .450 கோடிகள் . உசிலம் பட்டி -ஆண்டிபட்டி இடையே பணிகள் நவம்பர் 2020 க்குள் முடிக்கவும், ஆண்டிபட்டி -தேனி இடையே பிப்ரவரி 2021 லும், தேனி –போடி நாயக்கனுர் இடையே செப்டம்பர் 2021 க்குள் நிறைவு செய்யப்படும். மதுரை- தூத்துக்குடி -திருநெல்வேலி இரட்டைப்பாதை மொத்தம் 188 கி.மீ., தூரத்தில் 44 கி.மீ., பணி முடிந்துள்ளது.
புதிய பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2078 மீட்டர். செப்., 2021க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்- தனுஷ்கோடி புதியபாதை தூரம் 18.7 கி.மீ., இதன் திட்டமதிப்பு ரூ. 208.3 கோடி. மதுரை -தூத்துக்குடி புதிய ரயில் பாதை (அருப்புக் கோட்டை வழி) மொத்தம் 135 கி.மீ., தூரத்திற்கு ரூ.120கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக , மதுரை கோட்டம் 35 சிறப்பு ரயில்களை இயக்கி, 35618 பயணிகளை ஏற்றி சென்றிருக்கிறது.
மதுரை ரயில்வே மருத்துவமனை இதுவரை 220 நோயாளிகளை குணப்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்தின் மூலம் , மதுரை கோட்டம் இந்த நிதி ஆண்டில் ரூ 71.56 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT