Published : 19 Aug 2020 08:09 PM
Last Updated : 19 Aug 2020 08:09 PM
பணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.
அப்படிப்பட்ட, மதுரைக்காரர் ஒருவரை ஆப்பரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா மலைகிராம மக்கள் நாயகனாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் கண்ணன் அம்பலம் (வயது 43), எத்தியோப்பியா மலைகிராம மக்கள், பள்ளிக் குழந்தைகள், சிற்றாறுகளையும், கால்வாய்களையும் கடந்து செல்வதற்கு 49 பாலங்கள் அமைத்துள்ளார்.
மேலும், மக்கள் சுகாதாரமான குடிநீரை குடிப்பதற்கு இந்தியாவின் நீர் மேலாண்மையைப் பயன்படுத்தி 28 இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அங்குள்ள ஆப்ரிக்க மாணவர்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ளார்.
எம்.ஏ பொது நிர்வாகம், எம்பில் மற்றும் பிஎச்டி படித்துள்ள இவர் ஐஏஎஸ் அதிகாரியாகி கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தனது குறிக்கோளாக கொண்டிருந்தார்.
அதற்காக 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதினார். ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. அப்போது, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்ள ஒல்லேகா பல்கலைக்கழகத்தில் (Wollega University) பேராசிரியாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றார்.
அங்கு சென்றபிறகும் கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவரை விட்டுப்போகவில்லை. அதை உலகில் உள்ள எந்த கிராமத்திற்கு செய்தால் என்ன என்று, தான் பணிபுரியும் எத்தியோப்பியா நாட்டிலே உள்ள மலைகிராம மக்களுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
அவரிடம் பேசினோம், ‘‘உலகளவில் எத்தோபியா நாடு மிகவும் பின்தங்கிய நாடு. ஆனாலும் அங்கு நிறைய இயற்கை வளங்கள் உள்ளன. ஆனால், அந்த வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் உள்ளூர் மக்களுக்கு பிரச்சனைகள் இருந்தன.
அதனால், உள்ளூர் வளங்களை மக்களைப் பயன்படுத்த வைப்பது, குறைந்த செலவில் எளிமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என முடிவு செய்தேன்.
நான் கற்பிப்பது பொதுநிர்வாகம். இந்த துறையை எடுத்து படிக்கும் மாணவர்கள் படிப்போடு சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி கையாள்வது, தீர்வு காண்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதனால், இந்தத் திட்டங்களை மாணவர்களை கொண்டு நிறைவேற்ற தொடங்கினேன். அதில் மக்களுடைய பங்களிப்பும் இருந்தது. அவர்கள் பாலம் கட்டுவதற்கான மணல், கற்கள், மரம் மற்றும் மனித உழைப்பைக் கொடுத்தார்கள். நாங்கள் சிமெண்ட், இரும்புக் கம்பி, குடிநீர் குழாய் போன்றவற்றையும், பொறியியல் சம்பந்தமான திட்டங்களை வடிவமைக்கும் காரியங்களை செய்தோம்.
அப்படி இதுவரை 49 பாலங்களை எத்தியோப்பியா கிராமங்களில் அமைத்துள்ளோம். 28 சுத்திகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். எத்தியாப்பியா நாடுகளில் மக்கள் மலைகளில் அதிகம் வசிக்கின்றனர். ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்றைக் கடந்து தான் போக வேண்டும்.
நிறைய இடங்களில் ஆறு உள்ளதால் அவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. தற்போது நாங்கள் பாலம் கட்டிக் கொடுத்தால் அவர்கள் எளிதாக போவதற்கு உதவி செய்துள்ளோம். அவர்களால் விவசாயப் பொருட்களை எளிதாக சந்தைக்கு கொண்டு செல்ல முடிகிறது. முன்பு குழந்தைகள் தனியாக பள்ளிக்கு செல்ல முடியாது.
பெற்றோர்கள் பள்ளிக்கு அவர்களை செல்ல வேண்டியிருந்ததால் அவர்கள் விவசாயப்பணிகள் பாதித்தது.
அதனாலேயே, அவர்களை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இடைநிற்றல் அதிகமாக இருந்தது. தற்போது நாங்கள் கட்டிக்கொடுத்த பாலங்கள் வழியாக குழந்தைகள் தனியாகவே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
நாங்கள் சுத்திகரிப்பு குடிநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு முன், ஆற்றில், கால்வாயில், குட்டைகளில் வரும் அழுக்கான தண்ணீரை குடித்தார்கள்.
அதே தண்ணீரே கால்நடைகளும் அருந்தும். அதனால், அங்குள்ள மக்களுடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. தற்போது எங்கள் திட்டத்தால் மக்களுடைய சுகாதாரமும், வருமானமும் கூடியுள்ளது, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT