Published : 19 Aug 2020 06:01 PM
Last Updated : 19 Aug 2020 06:01 PM
பல்வேறு துறைகளின் கடும் நெருக்கடிகளால் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் கேரட் கழுவும் இயந்திரங்கள் இயங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முக்கியமான தொழில்கள் விவசாயம் மற்றும் சுற்றுலா. நீலகிரி மாவட்டத்தில் தான் அதிகமாக தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் காய்கறி 7,0000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. அதில், கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.
மாவட்டத்தில், குறிப்பாக முத்தோரை பாலடா, கேத்தி பாலாடா, காட்டேரி வில்லேஜ், சேலாஸ், தூதூர் மட்டம், கொலக்கம்பை ஆகிய கிராமங்களில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உருளை கிழங்கு மற்றும் கேரட் அதிகளவில் பயிரிப்படுகின்றன.
கேரட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தின் விளைப்பொருளாக கேரட் தேர்வு செய்துள்ளது. இதன் காரணமாக கேரட்டுக்கு தேவை அதிகரித்து விவசாயிகள் லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கை கொடுக்கும் கேரட் கழுவும் இயந்திரங்கள்
கேரட் பயிர்களை அறுவடை செய்து கழுவி, மூட்டைகளில் கட்டிய பின்னரே சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனால், கேரட் அறுவடை செய்ய தண்ணீர், தொழிலாளர்கள் ஆற்றல் மற்றும் நேரமும் தேவை.
சந்தைகளில் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால் கேரட்டுக்கு விலை குறைந்து நஷ்டம் ஏற்படும்.
இதனால், கேரட் அறுவடை செய்ய தொழிலாளரகள் அதிகாலை 2-3 மணிக்குத் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டும். அறுவடை செய்த பின்னர் தண்ணீர் உள்ள பகுதிகளுக்குக் கொண்டு சென்று கழுவ வேண்டும். இந்நிலையில், கேரட் கழுவும் இயந்திரங்கள் அறிமுகமான பின்னர் அறுவடை எளிதாகிவிட்டது. மாவட்டத்தில் அதிகம் கேரட் பயிரிப்படும் இடங்களில் இந்த இயந்திரங்கள் அரசு மானியத்துடன் நிறுவப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் அறுவடை செய்த பின்னர், இந்த இயந்திரங்களில் கழுவி, மூட்டைகளில் சேகரித்து, அங்கிருந்தே லாரிகளில் ஏற்றி சந்தைக்கு அனுப்பி விடுகின்றனர்.
நெருக்கடியால் சுணக்கம்
இந்நிலையில், கேரட் கழுவும் இயந்திரங்கள் இயக்கப்படும் இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
மாவட்டத்தில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்காத 5 இயந்திரங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்துள்ளது.
பல்வேறு துறைகள் கடும் நெருக்கடி அளித்து வருவதால், கேரட் கழுவும் இயந்திரங்களை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் 60 கேரட் கழுவும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசு மானியத்துடன் கேரட் கழுவும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்துக்கு பின்னர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்டன. சுத்திகரிப்பு இயந்திரங்களை உரிமையாளர்கள் நிறுவி வருகின்றனர்.
இந்நிலையில், ஏதாவது காரணம் காட்டி பல்வேறு துறையினர் எங்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றனர். இதனால், இயந்திரங்களை இயக்க முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எங்களுக்கு வழிமுறைகளை எளிதாக்கி, ஒரு துறையின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட பரிசீலித்து வருகிறோம்" என்றனர்.
இந்நிலையில், இந்த இயந்திரங்கள் செயல்பாடு நிறுத்தப்பட்டால், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி ஹரிஹரன் கூறும் போது, "கேரட் கழுவுவது எளிதாகி விட்டதால், விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகின்றனர். ஆண்டுக்கு நான்கு போகம் கேரட் விளைவிக்கப்படுகிறது.
கேரட்டை கழுவி, தரம் பிரித்து லாரிகளில் ஏற்றும் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரட்டை கழுவ விவசாயிகள் இந்த இயந்திரங்களை தான் நம்பியுள்ளனர். கடும் விலை சரிவுக்குப் பின்னர் தற்போது தான் கிலோவுக்கு ரூ.50 விலை கிடைத்து வருகிறது. இதனால், பல விவசாயிகள் கேரட் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரட் கழுவும் இயந்திரங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்"
என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT