Published : 19 Aug 2020 05:17 PM
Last Updated : 19 Aug 2020 05:17 PM

நளினி, முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது: மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை

ராஜீவ் கொலை வழக்கில் உள்ள அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி மற்றும் முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும். என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசு தரப்பில் அளித்த பதிலில், “ வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும்” என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி பதிலளித்தார், அவரது பதில் மனுவில், “பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த ஜூலை 27 ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் உள்ள அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி மற்றும் முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும். சிறை அதிகாரிகள் மூலம் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும் முக அசைவு மற்றும் உருவ அசைவில் கருத்துக்களை பரிமாற்றக் கூடும்”. என விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிறைத் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், 2011-ம் ஆண்டு அரசாணையின் படி சிறைக்கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை. இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒரு முறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்க படுகிறது. எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை.

சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரை முருகன் கடந்த ஏப்ரல் மாதம் கூட, வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசினார், நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளார்”. எனத் தெரிவித்தார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x