Last Updated : 19 Aug, 2020 04:04 PM

 

Published : 19 Aug 2020 04:04 PM
Last Updated : 19 Aug 2020 04:04 PM

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை கோம்பை கிராமத்தில் கி. பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

கோம்பை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரிகள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் வேந்தன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை கோம்பை கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, பல்லவர், சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள், கற்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:

"கடந்த 12 ஆண்டுகளாக வரலாற்று சின்னங்களை தேடிச்சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி போன்ற பகுதிகளில் வரலாற்று தடயங்களை ஆராய்ந்து அவற்றை வெளி உலகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை ஏலகிரி மலைப்பகுதியில் கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடாரிகள் எங்கள் ஆய்வுக்குழுவால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை என்ற மலைக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வு நடத்தினோம். அப்போது கோம்பை நிலப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 நடுகற்களும், மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில்களில் 50-க்கும் மேற்பட்ட கற்கோடாரிகள் இருப்பதை கண்டறிந்தோம்.

கோம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டறிந்தோம். இந்த கல்லானது 5 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள எழுத்துகள் சிதைந்துள்ளதால் தெளிவாக தெரியவில்லை.

இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் உள்ளது. இடையில் குறுவாள் உள்ளது.

கோம்பை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்

2-வது நடுகல்லானது தலைக்கொண்டை மட்டுமே தெரிந்த நிலையில் முழுக்கல்லும் மண்மூடி கிடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் நடுகல்லை ஆராய்ந்தோம். இக்கல்லானது 5.3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லில் உள்ள எழுத்துகளும் சிதைந்துள்ளதால் தெளிவாக படிக்க முடியவில்லை.

இக்கல்லின் அமைப்பை வைத்துப் பார்த்தால் பல்லவர் காலம் முடிந்து பிற்காலச்சோழர் காலம் தொடங்கிய காலத்தில் இக்கற்கள் செதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, கி.பி.9-ம் நூற்றாண்டின் தொடக்கம் என தெரிகிறது.

2-வது கல்லில் உள்ள வீரன் நேர்த்தியான மேல் கொண்டை இட்டுள்ளான். அவனது காதுகளில் நீண்ட குண்டலங்கள் உள்ளன. இடையில் உள்ள ஆடை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் எந்தியபடி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீரனின் தோற்றத்தைப் பார்க்கும்போது இனக்குழுத் தலைவன் போல் காட்சி தருகிறது. பகைவர்களோடு நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லுக்கு இவ்வூர் மக்கள் வேடியப்பன் என பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.

அதேபோல், கோம்பை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில்களில் பழமை வாய்ந்த கற்கோடாரிகள் சிறிதும், பெரிதுமாக காணப்படுகிறது. கற்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடவும், அதன் கடினமான தோல்களை கிழிக்கவும், மரங்களை வெட்ட கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் கற்கோடாரிகள்.

அதன் பிறகு, பிளேடு போன்ற கூர்மையான சிறு, சிறு நுண்கருவிகளை மனிதன் கண்டறிந்தான்.

இந்த கற்கோடாரிகள் கி.மு.1,000-ம் ஆண்டுகள் அதாவது 3,000 ஆண்டுகளுக்குப் பழமையுடையாதாக இருக்கும். இதன் மூலம் இப்பகுதியில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அரிய முடிகிறது.

இது தவிர இப்பகுதியில் மலை உச்சியில் உள்ள முருகன் கோயிலுக்குப் பின்புறம் பல கற்திட்டைகள் உள்ளன. இது போன்ற வரலாற்று சின்னங்களை மாவட்ட தொல்லியல் துறையினர் பாதுகாத்து ஆவணம் செய்ய வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x