Last Updated : 19 Aug, 2020 03:03 PM

 

Published : 19 Aug 2020 03:03 PM
Last Updated : 19 Aug 2020 03:03 PM

நைஜீரியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த உயிரிழந்த மாலுமியின் உடல் சொந்த ஊருக்கு வந்தது: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

தூத்துக்குடி

நைஜீரியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமியின் உடல் இன்று காலை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது. உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலை சேர்ந்தவர் வில்ஜியூஸ் லோபோ. இவர் அருகேயுள்ள சேர்ந்த பூமங்கலம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் வில்பன் லோபோ (21). இவர் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் எம்.வி. ஹல்விட்டா என்ற கப்பலில் இயந்திர பணியாளாராக 9 மாதகாலம் ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த 15.11.2019 அன்று பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் 26.07.2020 அன்று இரவு 10.30 மணியளவில் கப்பல் நைஜீரியா நாட்டு கடல் பகுதியில் நின்றபோது வில்பன் லோபோ கப்பலில் இருந்து திடீரென தவறி விழுந்து விட்டார்.

நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் 28.07.2020-ல் கிடைத்தது. உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

மாலுமி வில்பன் லோபோவின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும் மனு அளித்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை தொடர்ந்து வில்பன் லோபோவின் உடல் நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பை வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தது.

இதையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வில்பன் லோபோவின் உடல் சொந்த ஊரான புன்னக்காயலுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை அவரது உடல் புன்னக்காயல் வந்து சேர்ந்தது.

வில்பன் லோபோவின் உடலைப் பார்த்து அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உடனடியாக அவரது உடல் அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் உறவினர்கள், நண்பர்கள், கப்பல் மாலுமிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x