Published : 19 Aug 2020 02:15 PM
Last Updated : 19 Aug 2020 02:15 PM

உரிமத்தைப் புதுப்பிக்க முடியாத விரக்தியில் ஆட்டோ எரிப்பு: ஓட்டுநருக்கு புதிய ஆட்டோவை வழங்கினார் ஸ்டாலின்

புதிய ஆட்டோவுக்கான சாவியை வழங்கும் ஸ்டாலின்

சென்னை

உரிமத்தைப் புதுப்பிக்க முடியாத மனவேதனையில் ஆட்டோவை எரித்தவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய ஆட்டோவினை வழங்கியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாண்டமுத்து. சென்னை, அயனாவரம் பகுதியில் வசித்து வரும் இவர், வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டோ உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக, சென்னை, அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார்.

ஆனால், அவரை அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும் உரிமத்தைப் புதுப்பிக்க பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாண்டமுத்து, போக்குவரத்து அலுவலகத்திலேயே தன் ஆட்டோவின் மீது டீசல் ஊற்றி எரித்தார். மேலும், அவர் தற்கொலைக்கும் முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சமீபத்தில் அவரை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், புதிய ஆட்டோ வாங்குவதற்காக பண உதவி செய்தார்.

இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (ஆக.19), சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தாண்டமுத்துவின் ஏழ்மை நிலையினைக் கருத்தில் கொண்டு, அவருக்கு, புதிய ஆட்டோ ஒன்றினை கொடுத்து, அதற்கான சாவியை வழங்கினார். அப்போது, மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏவும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x