Published : 19 Aug 2020 11:09 AM
Last Updated : 19 Aug 2020 11:09 AM
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் என மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் பவானிசாகர் அணை கட்டி இன்றோடு 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 66-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
ஆசியாவின் நீளமான அணை, தென் இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற சிறப்புகளைப் பெற்ற பவானிசாகர் அணை, பவானி ஆறும், மாயாறும் கலக்குமிடத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பவானிசாகர் அணை என்று அழைக்கப்படும் கீழ்பவானி அணையின் கட்டுமானப்பணிகள் 1948-ல் தொடங்கப்பட்டு, 1955-ல் நிறைவுபெற்றது. அணைக்கான கட்டுமானச் செலவு ரூ.10.50 கோடியாகும். 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் முழு கொள்ளளவாக 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம். அணையின் உயரம் 120 அடியாக இருப்பினும், 105 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும்.
கல்லணை மற்றும் மண் அணையையும் சேர்த்து மொத்தம் 8.78 கி.மீ நீளம் கொண்டதாகும். கல்லணையின் 9 வழிந்தோடிகள் மூலம் விநாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கன அடி நீரை அணையில் இருந்து வெளியேற்றலாம். கல்லணையில் 5 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்ட வடிகால் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
பவானி சாகர் அணையில் இருந்து 124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இப்புதிய ஆயக்கட்டு இரு பகுதிகளாக (ஒற்றை படை, இரட்டை படை மதகுகள்) பிரிக்கப்பட்டு, வருடாவருடம் ஒரு பகுதிக்கு ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நெல்லுக்கும், மறு பகுதி புன்செய் பயிருக்கும், மாறி மாறி பாசனம் பெருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புன்செய் பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் என மொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவைப்படுகிறது.
பவானிசாகர் அணை கட்டப்படுவதற்கு முன்பே கொடிவேரி அணைக்கட்டும், காலிங்கராயன் அணைக்கட்டும் கட்டப்பட்டிருந்தன. கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், காலிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ஆயிரம் ஏக்கரும் பாசனம் பெறுகிறது
பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம். கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
பவானிசாகர் அணை கட்டுமானப் பணிகள் நடை பெற்றபோது, (1953-ம் ஆண்டு) அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஆகியோர் நேரில் பார்வை யிட்டுள்ளனர். பவானிசாகர் அணை கடந்த 66 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 20 முறையும், 100 அடி நீர்மட்டத்தை 26 முறையும் எட்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான இந்த பவானிசாகர் அணை 65 ஆண்டுகள் கடந்து, 66-வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT