Published : 19 Aug 2020 08:01 AM
Last Updated : 19 Aug 2020 08:01 AM
``சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்" என, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கும், எங்களோடு துணை நின்ற ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், ஒப்பந்ததாரர்கள், சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரத்தின் தேவை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு சென்றுள்ளது. துரதிர்ஷ்டமான இந்த நிலை மாற வேண்டும். அதற்கான முயற்சியைதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்தோம். ஆனால், அதில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நகல் கிடைத்ததும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆலையைத் திறக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் தொடர்ந்து செய்வோம். ஆலை 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், தினமும் எங்களுக்கு ரூ. 5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையை நம்பி நடைபெற்று வந்த ஆண்டுக்கு ரூ.600 கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட்ஆலையில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு இயங்கும் பல தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிற்சாலை எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் திடீரென மூடப்பட்டது தமிழகத்துக்கு வரும் தொழில் முதலீடுகளில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதில், அரசியல் காரணங்கள் இருந்ததா, இல்லையா என்பது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை.
ஆலையை அரசு மூடியதை எதிர்த்து சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவோம். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. முதல் கட்டத்தில் பின்னடைவு இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயமான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு பங்கஜ் குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT