Published : 19 Aug 2020 07:29 AM
Last Updated : 19 Aug 2020 07:29 AM
தமிழக அரசு இந்து விரோத அரசாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் விருப்பம் என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நெல்லையில் மாதா கோயில், நாகூர் தர்கா ஆகியவற்றில் உற்சவங்கள் நடத்த அரசு அனுமதிக்கிறது. ஆனால் இந்துக்களுக்கான விநாயகர் சதுர்த்தியை நடத்த மட்டும் பாரபட்சம் காட்டுகிறது. காரணம் கரோனா வைரஸ் பரவிவிடும் என்கிறார்கள். ஆனால், இந்த அச்சத்திலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.
ஜாதி, மத பாரபட்சம் காட்டாமல் செயல்பட வேண்டியது அரசுகளின் பொறுப்பு. ஆனால், இந்துக்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு இந்து விரோத அரசாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.
ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் திறக்கப்படவில்லை. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கோயில்களை திறக்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் ஸ்தலத்தார், நிர்வாகிகள் குறித்தும் தவறான கருத்துகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். வைஷ்ணவர்களுக்கு ஆதரவாக பேசுவதுபோல இந்து விரோத கருத்துகள் தெரிவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT