Published : 18 Aug 2020 11:30 AM
Last Updated : 18 Aug 2020 11:30 AM
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அன்றைய தினமே ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், தமிழக அரசின் அரசாணை செல்லாது என கூறும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை முறைப்படி அணுகி முறையிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்டோரும் தங்களை எதிர் மனுதார்களாக இணைத்துக் கொண்டன. இந்த வழக்கில் விசாரணை முடிந்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு திரண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உற்சாகமாக முழக்கமிட்டனர்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும், அதிமுகவினர் எஸ்.பி. சண்முகநாதன் எல்எல்ஏ தலைமையிலும், திமுகவினர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையிலும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோன்று மதிமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதற்கிடையே ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொண்டாட்டப் புகைப்படங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT