Published : 18 Aug 2020 11:37 AM
Last Updated : 18 Aug 2020 11:37 AM
மும்பையில் பெய்யும் கன மழை காரணமாக கோதாவரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து ஆந்திரா எல்லையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் படகில் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆளுநர் - அமைச்சர் இடையிலான கருத்து வேறுபாட்டால் அமைக்கப்படாத தடுப்பு சுவரே பாதிப்புக்கு முக்கியக் காரணம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், கேரளத்தையொட்டி மாஹேயும், ஆந்திரத்தையொட்டி கோதாவரி ஆற்றங்கரையோரம் ஏனாமும் அமைந்துள்ளது.
மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் வழியாக கடலில் கலந்து வருகிறது. கனமழையால் பத்ராச்சலம் அணை 52 அடி கொள்ளளவு தாண்டி விட்டது. இதனால் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோதாவரி ஆற்றுக் கரையில் உள்ள ஏனாம் பகுதி தற்போது வெள்ளக்காடாக காணப்படுகிறது. ஏனாமில் பரம்பரா பேட், பாலயோகி நகர், ராஜீவ் காந்தி நகர், வெங்கட் நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பகுதி கோதாவரி ஆற்று கரையோர கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியினரிடம் விசாரித்தபோது, "கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஏனாம் பகுதியில் தண்ணீர் புகுவது வழக்கம். இதனால் ஏனாமில் வௌ்ளத்தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை. இதையடுத்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஏனாம் பிராந்தியத்துக்கான திட்டங்களை ஆளுநர் தடுத்து நிறுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ஏனாமில் கோதாவரி ஆற்று கரையோரம் தடுப்புச்சுவர் அமைப்பதில் அமைச்சருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தடுப்பு சுவர் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த தடுப்பு சுவர் மட்டுமே வெள்ளப்பெருக்கில் இருந்த ஏனாமை காப்பாற்றப்படும்" என்கின்றனர்.
ஏனாம் பிராந்திய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3.5 மீட்டர் அளவுக்குத் தண்ணீர் செல்கிறது. இதனால் ஏனாமில் உள்ள கரையோர பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்தது. குறிப்பாக, ஏனாமுக்கு உட்பட்ட பிரான்ஸ் திப்பா வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு வசிக்கும் மக்களை படகு மூலம் வருவாய்த்துறையினர் மீட்டு வருகின்றனர். . இருப்பினும், பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் அதே இடத்தில் மேடான பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். ஆற்றில் நீர் மட்டம் குறைந்தால்தான் பிரான்ஸ் திப்பா பகுதியில் புகுந்த வெள்ள நீர் வடியும். ஆனால், 3 வார காலத்துக்கு வெள்ள பெருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து, அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT