Last Updated : 18 Aug, 2020 09:59 AM

 

Published : 18 Aug 2020 09:59 AM
Last Updated : 18 Aug 2020 09:59 AM

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய‌ புதுச்சேரி 

புதுச்சேரியில் வெறிச்சோடிய சாலை

புதுச்சேரி  

முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி இன்று வெறிச்சோடியது.

புதுவையில் கடந்த ஜூலையில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 பேருக்குத் தொற்றுப் பரவியது. இம்மாத தொடக்கத்தில் சராசரியாக தினமும் 300 பேர் என தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 114-ஐ தாண்டியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,500 பேர் மருத்துவமனைகளிலும், அதை விட கூடுதலாக வீடுகளிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,000-ஐத் தாண்டியுள்ளது.

இதனால் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க அரசு முடிவு செய்தது. இதனால், கடந்த 14-ம் தேதி முதல் இரவு 7 மணியுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிட்டது. 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் இரவு 7 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

இதன்படி, செவ்வாய்க்கிழமையான இன்று (ஆக.18) காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே இரவு 7 மணிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு 7 மணி முதல் புதுவையில் ஊரடங்கு தொடங்கியது.

செவ்வாய்க்கிழமையான இன்று காலை வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தது. தொழிற்பேட்டைகள் அனைத்தும் மூடப்பட்டன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவையும் இயங்கவில்லை. மருந்தகம், பாலகம் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவையும் இயங்கவில்லை. இதனால் நகரத்தின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, படேல் சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடின.

அத்தியாவசிய துறைகளின் பணியாளர்கள் மட்டும் பணியில் உள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வெளியில் நடமாடியவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்துகின்றனர். அனுமதியின்றி நடமாடியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகின்றன.

ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர்

மாநில எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனகசெட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தமிழகத்திலிருந்து புதுவைக்கு வருபவர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அவசர மருத்துவ சேவை, அத்தியாவசிய பணிகளுக்கு வந்தவர்களுக்கு மட்டும் அனுமதியளித்தனர். இ-பாஸ் பெற்றிருந்தால் அனுமதி தரப்படுகிறது. இதேபோல கிராமப்புற பகுதியிலும் கடைகள் அனைத்தும் முழு ஊரடங்கால் அடைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x